ஹாலிவுட்

நீண்டநாள் காதலரைக் கரம்பிடித்த ‘சான்ஸா ஸ்டார்க்’

செய்திப்பிரிவு

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் நாயகியான சோஃபி டர்னர், தனது காதலரைத் திருமணம் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட தொலைக்காட்சித் தொடர் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இதில் மிக முக்கியக் கதாபாத்திரம் சான்ஸா ஸ்டார்க். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சோஃபி டர்னருக்கும், அவரது நீண்ட நாள் காதலரான ஜோ ஜோனஸுடன் நேற்று (மே 2) திருமணம் நடைபெற்றது.

நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸின் சகோதரரான ஜோ ஜோனஸை நீண்ட நாட்களாகவே சோஃபி டர்னர் காதலித்து வந்தார். பிரியங்கா - நிக் ஜோனஸ் திருமணத்தின்போது கூட இவர்கள் ஜோடியாக இந்தியா வந்திருந்தனர்.

தற்போது சோஃபி - ஜோ திருமணம், லாஸ் வேகாஸில் அமைந்துள்ள ஒரு சிறிய தேவாலயத்தில், எளிய முறையில் நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்கு சில உறவினர்கள், மிக நெருங்கிய நணபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

சோஃபி - ஜோ திருமணத்தை, உலகம் முழுவதுமுள்ள ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகவுள்ள மார்வெல் நிறுவனத்தின் ’எக்ஸ்-மென்: டார்க் ஃபீனிக்ஸ்’ படத்தில் சோஃபி டர்னர் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT