தகுதியுள்ள இயக்குநர்களைக் கொண்டு ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கடைசி சீஸனை மீண்டும் எடுக்கக் கோரி 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கையெழுத்திட்டு எச்பிஓ நிறுவனத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.
1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதே ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர். இத்தொடரின் முதல் எபிசோட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், இதுவரை 7 சீஸன்களாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சீஸனிலும் 10 பகுதிகள்.
பரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையால், இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் போர்தான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.
இத்தொடரின் இறுதி அத்தியாயமான 8-வது சீஸனில், இதுவரை 5 எபிசோட்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஒரு எபிசோட் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த சீஸனின் எபிசோட்கள் வெளியாகத் தொடங்கியது முதலே இந்த சீஸன் முந்தைய சீஸன்களைப் போல இல்லை என்றும், முக்கியக் கதாபாத்திரங்களின் பாத்திரப் படைப்பையே சிதைத்து விட்டனர் என்றும் பெரும்பாலான ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். 4-வது எபிசோட் வெளியானபோது, ஒரு காட்சியில் ஸ்டார்பக்ஸ் காஃபி கப் ஒன்று இடம்பெற்று சர்ச்சையைச் கிளப்பியது. இது கவனக்குறைவால் ஏற்பட்டது என எச்பிஓ தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், உலகம் முழுவதுமுள்ள ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் charge.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மனு ஒன்றில் கையெழுத்திட்டு எச்பிஓ நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில், தகுதியான இயக்குநர்களைக் கொண்டு 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கடைசி சீஸனை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ 8-வது சீஸனை, டேவிட் பெனிஆஃப் மற்றும் டிபி வெய்ஸ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.