ஹாலிவுட்

ஸ்பீல்பெர்க்கின் ‘ஒத்தைக்கு ஒத்த’: 71-லேயே பட்டையைக் கிளப்பிய Duel

சல்மான்

பெரும்பாலான வெகுஜன ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடம் சென்று, ‘உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட் இயக்குநர் யார்?’ என்று கேட்டால், பிடிக்கிறதோ இல்லையோ... ஆனால், தவறாமல் இந்த இருவரில் ஒருவரின் பெயரைக் கூறுவார்கள்.ஒருவர், ‘டைட்டானிக்’ என்ற பிரம்மாண்ட க்ளாசிக்கைத் தந்த ஜேம்ஸ் கேமரூன். இன்னொருவர், ‘ஜுராசிக் பார்க்’ என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இருவருமே  Schindler's List,Saving Private Ryan, Avatar உள்ளிட்ட வேறு சில தரமான படங்களைக் கொடுத்திருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள வெகுஜன ரசிகர்கள் மத்தியில் மேற்கண்ட இரண்டு படங்களும் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது.

அந்த வகையில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய படங்களில் பலராலும், ஏன் அவரது ரசிகர்களாலேயே பெரிய அளவில் பேசப்படாத படம், 1971-ம் ஆண்டு வெளிவந்த ‘Duel'.

படத்தின் நாயகன் டேவிட் மேன், தனது தொழில் நிமித்தமாக ஒரு நகரத்துக்கு வெளியே நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். அப்படிச் செல்லும்போது, ஆள் அரவமற்ற சாலையில் சென்று கொண்டிருக்கும் ஒரு துருப்பிடித்த பெரிய ட்ரக்கை யதேச்சையாக முந்திச் செல்கிறார். பின்னர், எதிர்பார்க்காத நேரத்தில் திடுக்கிடும் வகையில் அவரை முந்துகிறது ட்ரக். எரிச்சலடையும் மேன், விடாமல் முன்னேறிச் சென்று ட்ரக்கை முந்துகிறார். பிறகு, ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்துகிறார். பின்னாலேயே ட்ரக்கும் வருகிறது. அங்கு இருக்கும் டெலிபோனில் தனது மனைவியைத் தொடர்புகொண்டு, முந்தைய நாள் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோருகிறார். அன்று மாலை சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வருவதாகவும் வாக்கு கொடுக்கிறார். இந்தச் சம்பவத்துக்கு சற்று முன்பு, தன்னைப் பின்தொடர்ந்த அந்த ட்ரக்கின் ஓட்டுநரை, காரில் அமர்ந்தபடி பார்க்க முயற்சி செய்கிறார் மேன்.

ஆனால், ஓட்டுநரின் கையையும் பூட்ஸையும் தவிர அவரால் வேறு எதையும் காண முடியவில்லை. காரை எடுத்துக் கொண்டு கிளம்பும் மேனை, மீண்டும் பின்தொடர்கிறது ட்ரக். வழிவிட்டாலும், முன்னே சென்று வேகத்தைக் குறைத்து அவரைப் போகவிடாமல் செய்கிறது. ட்ரக் ஓட்டுநர் தன் கைகளை ஜன்னலுக்கு வெளியே நீட்டி முன்னால் செல்லுமாறு சைகையால் கூறுகிறார். இதைக் காணும் டேவிட் மேன் முன்னேறிச் செல்ல எத்தனிக்கும்போது, எதிரே வேகமாக ஒரு கார் வருகிறது. நிலை தடுமாறுகிறார் மேன். இங்கிருந்து தொடங்குகிறது மேனுக்கும், ட்ரக் டிரைவருக்கான Duel என்னும் ’ஒத்தைக்கு ஒத்த’ போட்டி. ட்ரக் டிரைவரின் நோக்கம் என்ன? இந்த உள்ளே - வெளியே போட்டியின் இறுதியில் வென்றது யார்? இந்தக் கேள்விகளுக்கான விடையே 'Duel'.

ரிச்சர்ட் மாத்ஸன் என்பவர், 1963-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொல்லப்பட்ட அதே தினத்தில், தன்னை ஒரு ட்ரக் நாள் முழுவதும் துரத்திய சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு சிறுகதையை எழுதுகிறார். புகழ்பெற்ற ‘ப்ளேபாய்’ இதழில் வெளியான இந்தச் சிறுகதை,  ஸ்பீல்பெர்க்கின் கைகளுக்கு அவரது உதவியாளர் மூலம் வந்து சேர்ந்தது.

சில குறும்படங்களையும், டிவி தொடர்களையும் இயக்கியிருந்தாலும், 1968-ம் ஆண்டு வெளியான Amblin என்ற ஒரே ஒரு முழு நீளப்படத்தை மட்டுமே இயக்கியிருந்தார் ஸ்பீல்பெர்க்.( இதுதான் பின்னாட்களில் Amblin Entertainment என்று தனது தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெயரிடக் காரணமாக அமைந்தது).

முதலில் இப்படி ஒரு கதையை புது இயக்குநர் எடுக்க நினைப்பதற்கே தனி தைரியம் வேண்டும். படம் வெளியான ஆண்டு 1971 என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். கிராபிக்ஸ், விசுவல் எஃபெக்ட்ஸ் என எந்தத் தொழில்நுட்பமும் வளரத் தொடங்காத காலகட்டம்.

ஹாலிவுட் சினிமாவில் மார்ட்டின் ஸ்கார்ஸெசியும், ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், ஒரு காருக்கும் ட்ரக்குக்கும் நடக்கும் cat and mouse கேமை கதைக்கருவாகக் கொண்டு களத்தில் இறங்குவது, சுனாமியில் ஸ்விம்மிங் அடிக்கத் தயாராவதற்கு இணையானது. தொடர் உரையாடல்களும், கோட் சூட் நாயகர்களும் ஹாலிவுட் திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரத்தில், படம் பார்க்கும் ஆடியன்ஸை சீட் நுனிக்குக் கொண்டுவரும் வகையில் படமெடுப்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத ஒன்று.

முதலில் தொலைக்காட்சிகளில் மட்டுமே வெளியான இப்படம், பின்னர் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தால் 1972-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தொலைக்காட்சிகளில் வெளியானபோது வெறும் 74 நிமிடங்கள் மட்டுமே இருந்த இப்படத்தில், மேலும் சில காட்சிகளை இணைக்க முடிவு செய்தார் ஸ்பீல்பெர்க். மனைவியிடம் போனில் பேசும் காட்சி, ரயில் தண்டவாளக் காட்சி, ஸ்கூல் வேன் சம்பந்தப்பட்ட காட்சி ஆகியவை பின்னர் சேர்க்கப்பட்டன.

படத்தில் நடித்திருப்பவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிட முடியும். நாயகனின் காரும், அதை இறுதிக்காட்சி வரை துரத்திக்கொண்டே வரும் அந்த ட்ரக்கும்தான் படம் முழுக்க வருகின்றன.

படத்தின் வில்லன், அந்த துருப்பிடித்த டரக்தான் (‘மரகத நாணயம்’ படத்தில் வரும் இரும்பொறை அரசனின் ட்ரக் ஞாபகம் வருகிறதா?).

இதில் சிறப்பு என்னவென்றால், ட்ரக் ஓட்டுநரின் முகம் நமக்கு கடைசிவரை காட்டப்படுவதில்லை. ஒரு காட்சியில் ட்ரக்கின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் நாயகன், ஒரு பாரில் நுழைகிறார். அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் ட்ரக் ட்ரைவராக எண்ணி சந்தேகம் கொள்கிறார். பார்க்கும் நமக்கும் அவ்வாறே தோன்றுகிறது.

படம் தொடங்கும்போது எழுத்துகளின் பின்னணியில் ஒரு கேரேஜிலிருந்து வெளியேறும் கார், அடுத்த 5 நிமிடங்களுக்கு நகரத்திலிருந்து வெளியேறி Countryside என்று சொல்லப்படும் பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையை அடைவதை மட்டுமே பார்க்கிறோம். அந்த 5 நிமிடங்களும் வெறுமனே ஒரு கார் செல்வதைப் போல அல்லாமல், காரின் உள்ளே நாமே இருப்பது போன்ற பிரமை ஏற்படும். இங்கேயே தொடங்கிவிடுகிறது ஒளிப்பதிவாளரின் கேமரா ஜாலம். இதுபோல பல உதாரணங்கள் உண்டு. சில ஃப்ரேம்கள் 1971-ல் வெளியான படம் என்று நம்பவே முடியாத வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஆச்ச்ரயம். டெலிபோன் பூத் ஒன்றில் போலீஸுக்குத் தகவல் சொல்லிக் கொண்டிருக்கும் டேவிட் மேனை நோக்கி ட்ரக் வரும் காட்சி, பார்ப்பவர் ஹார்ட் பீட்டை நிச்சயம் எகிற வைக்கும்.

படத்தில் வசனங்கள் மிக மிகக் குறைவு. இசையும் சில இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் கேட்கும் வாகன இரைச்சல்களே படம் நெடுக வருகின்றன.

திரையரங்குகளில் வெளியாகியதுமே பெரிய வரவேற்பைப் பெற்றது 'Duel'. ஒரு இயக்குநராக ஸ்பீல்பெர்க்கையும் புகழின் உச்சத்தில் நிறுத்துகிறது. 1972-ம் ஆண்டு டிவி படங்களுக்கான கோல்டன் குளோப் விருதையும், சிறந்த ஒலி அமைப்புக்கான எம்மி விருதையும் தட்டிச் சென்றது.

இன்றுவரை வெளியான Road Movies ஜானர் படங்களில், மிக முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும் இந்த 'Duel'.

SCROLL FOR NEXT