உலகப்புகழ் பெற்ற ஸ்டார் வார்ஸ் படங்களை தயாரித்த லூகாஸ் ஃபிலிம் நிறுவனர் ஜார்ஜ் லுகாஸ் தனது புகழ்ப்பெற்ற ஸ்டார் வார்ஸ் படங்களை 1977-ம் ஆண்டு வெளியிடுவதற்கு 4 வருடங்களுக்கு முன்பே ‘தி அட்வென்ஞ்சர்ஸ் ஆஃப் இண்டியானா ஸ்மித்’ (the adventures of indiana jones) என்ற கதையை எழுதுகிறார்.
அதை இயக்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இயக்குநர் கதையின் பிரம்மாண்டத்தைப் பார்த்து படமாக்க திராணியின்றி படத்தை இயக்க மறுத்துவிட்டார். அதனால் அந்த முயற்சி தடைபட்டது. அந்த கதையை அப்படியே மூட்டை கட்டி வைத்துவிட்டு தான் எழுதிய மற்றொரு கதையில் கவனம் செலுத்துகிறார் லுகாஸ்.
அதுதான் ஸ்பேஸ் அட்வென்ஞ்சர் படங்களுக்கு இன்றளவும் ஒரு ட்ரேட்மார்க்காக விளங்கும் ‘ஸ்டார்வார்ஸ்’. அந்தப்படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாட ஹவாய் தீவுக்கு செல்கிறார் லூகாஸ். அங்கே அவருக்கு ஏற்கெனவே பரிச்சயமான இன்னொரு நண்பரை சந்திக்கிறார்.
ஸ்டார் வார்ஸ் வெளியான அதே ஆண்டு வெளியான ’Close Encounters of the Third Kind' என்ற படத்தை இயக்கி அதன் வெற்றியை கொண்டாட அங்கே வந்திருக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தான் அந்த நண்பர். லூகாஸிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் வகையிலான படத்தை இயக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை ஸ்பீல்பெர்க் வெளிப்படுத்துகிறார்.
அப்போதுதான் லூகாஸின் மூளையில் அந்த பளீரென அந்த யோசனை உதித்தது. 4 வருடங்களுக்கு முன்பு தான் எழுதிய கதையின் ஞாபகம் வந்துள்ளது. ஜேம்ஸை பாண்டை விட சூப்பர் கதை ஒன்று இருக்கிறது அதை கேட்கிறீர்களா என கேட்கிறார் லுகாஸ்.
ஸ்பீல்பெர்க்கிடம் தான் எழுதிய (the adventures of indiana jones) அட்வென்ஞ்சர்ஸ் ஆஃப் தி இண்டியானா ஜோன்ஸ் முழு கதையையும் கூறுகிறார். வித்தியாசமான கதைகளை தேடித் தேடி இயக்கும் ஸ்பீல்பெர்க்குக்கு சொல்லவா வேண்டும்? உடனே இயக்க ஒப்புக்கொள்கிறார்.
அப்படி உருவானதுதான் ’ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’ (Raiders of the lost ark). இனி கதைக்கு வருவோம். 1937-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளரான இண்டியான ஜோன்ஸ் ஒரு தங்க சிலையை தேடி பெரு நாட்டின் ஒரு காட்டின் நடுவில் இருக்கும் ஒரு பாழடைந்த கோவிலுக்கு செல்கிறார்.
சிலையை சுற்றிலும் பலவகையான பொறிகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் தாண்டி சென்று சிலையை எடுக்கிறார். சிலையை அதன் இருப்பிடத்திலிருந்து எடுத்ததும் கோவில் இடிந்துவிழத் தொடங்குகிறது. அங்கிருந்து தப்பித்து வெளியே வரும் ஜோன்ஸ் தன் போட்டி ஆராய்ச்சியாளரான பெல்லாக்கிடம் மாட்டிக் கொள்கிறார்.
சிலையை கொடுக்கவில்லையென்றால் கொன்று விடுவேன் என்று அங்குள்ள காட்டுவாசிகளின் உதவியுடன் மிரட்டுகிறார். சிலையை கொடுக்கும் ஜோன்ஸ் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து அங்கிருந்து தப்பிப்பதுடன் தொடங்குகிறது படம். அடுத்த காட்சியில் சராசரி பேராசிரியராக, இவரா ஜோன்ஸ் என்று எண்ணும் அளவுக்கு ஒரு கல்லூரியில் தீவிரமாக மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருப்பார்.
அப்போது அவரைப் பார்க்க இரண்டு ராணுவ அதிகாரிகள் கல்லூரிக்கு வருவார்கள். அவரிடம் ஒரு காலத்தில் நாஜிக்களின் பழைய வழிகாட்டியாக இருந்த ரேவன்வுட் என்பவரை பற்றி விசாரிப்பார்கள். அவரிடம் ’ஸ்டாஃப் ஆஃப் ரா’ என்னும் பதக்கம் இருப்பதாக அப்போது கூறுவார்கள்.
அந்த பதக்கத்துக்காக நாஜிக்கள் அவரை தேடிக் கொண்டிருப்பதாகவும், மேலும் மோசஸ் காலத்தில் தொலைந்து போன ஒரு பெட்டியையும் அவர்கள் தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிந்துக்கொள்ளும் அவர்கள். அந்த மந்திரப் பெட்டியையும் பதக்கத்தையும் இணைப்பதன் மூலம் சூரிய ஒளியின் உதவியைக் கொண்டு எதிர்களை ஒரே சமயத்தில் அழித்து விடலாம். அதற்காகத்தான் நாஜிக்கள் அந்த பெட்டியையும், பதக்கத்தையும் தேடி வருகின்றனர் என்று கூறுவார் ஜோன்ஸ்.
அதைக்கேட்டு திகைக்கும் அவர்கள் அவற்றை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஜோன்ஸிடமே ஒப்படைப்பார்கள். பதக்கத்தை தேடி நேபாளுக்கு பயணம் செய்யும் ஜோன்ஸ், ரேவன்வுட்டின் மகளை சந்திப்பார். ரேவன்வுட் இறந்துவிட்டதாகவும், அந்த பதக்கம் தன்னிடம் தான் இருப்பதாகவும் அவரது மகள் கூறுவார்.
ரேவன்வுட்டின் மகளான மரியான். பதக்கத்தை மறுநாள் வந்து வாங்கிக் கொள்ளுமாறு ஜோன்ஸிடம் கூறுவார். ஜோன்ஸ் அங்கிருந்து சென்றதும் அங்கு இன்னொரு கும்பல் உள்ளே வந்து பதக்கம் எங்கே என்று கேட்டு மரியானை மிரட்டும். அப்போது அங்கு வரும் ஜோன்ஸ் அந்தக் கும்பலிடமிருந்து அவரை காப்பாற்றுவார்.
பின்னர் பதக்கத்துடன் இருவரும் அங்கிருந்து தப்பிப்பார்கள். ஆர்க்கை தேடும் ஜோன்ஸின் இந்த பயணத்துக்கு உதவுவதாக கூறுவார் மரியான். பிறகு இருவரும் இணைந்து ஆர்க்கை கண்டுப்பிடித்தார்களா? இதன் மூலம் நாஜிக்களின் திட்டம் என்ன? என்பதே ’ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’ படத்தின் கதை.
கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்க்கு இணையான புகழ் பெற்ற இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்தின் தொடக்கப்புள்ளி இதுதான். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு முதலில் ’ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் பின்னாட்களில் 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’ என்று அழைக்கப்பட்டது.
இதற்கு அடுத்தடுத்த பாகங்களுமே இண்டியானா ஜோன்ஸ் என்ற பெயருடன் சேர்த்தே வெளியிடப்பட்டன. அந்த அளவுக்கு இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அதிக பட்ஜெட்டினாலும், லூகாஸ் போட்ட கண்டிஷன்களாலும் கிட்டத்தட்ட ஹாலிவுட்டின் அனைத்து பெரிய கம்பெனிகளாலும் நிராகரிக்கப்பட்ட இப்படம் கடைசியாக பாரமவுண்ட் நிறுவனத்தால் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
1981-ம் வெளியான இந்த படம்தான் அந்த வருடத்தின் அதிக வசூலை ஈட்டிய படம். சிறந்த ஆர்ட் டைரக்ஷன், எடிட்டிங், ஒலி, விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த சவுண்ட் எஃபெக்ட்ஸ் எடிட்டிங், ஆகிவற்றுக்காக 5 ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது ’ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’.
‘ஹாலிவுட்டின் சிறந்த படங்களில் ஒன்று’ என்று விமர்சகர்களால் அடிக்கடி குறிப்பிடப்படும் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இண்டியான ஜோன்ஸ் கதாபாத்திரத்தை ஏராளமான வீடியோ கேம்ஸ்களும் இன்றுவரை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 4 பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்த பாகம், வரும் 2021-ம் ஆண்டு வெளியாகிறது.
முதல் பாகத்திலிருந்து இண்டியான ஜோன்ஸாக நடித்து வரும் ஹாரிசன் ஃபோர்ட்தான் இந்த படத்திலும் நடித்து வருகிறார். 37 வயதில் முதல் பாகத்தில் நடிக்க ஆரம்பித்த ஹாரிசன் ஃபோர்டுக்கு தற்போது வயது 76. ’தி மம்மி’, ’டோம்ப் ரைடர்’ ’நேஷனல் ட்ரெஷர்’ என்று எத்தனையோ அட்வென்சர் படங்கள் ஹாலிவுட்டில் இன்று வரை வெளியாகி வெற்றிப் பெற்று கொண்டிருந்தாலும் அவை அனைத்திற்கும் ஏதோ ஒரு இடத்தில் இண்டியானா ஜோன்ஸின் தாக்கம் இருந்தே தீரும்.
2021-ம் ஆண்டு வெளியாகும் இண்டியான ஜோன்ஸ் அடுத்த பாகத்தை உலகெங்கும் ஸ்பீல் பர்க்கின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.