உலக அளவில் 305 மில்லியன் டாலர்களும், இந்தியளவில் 53.10 கோடி ரூபாயும் வசூலித்து முதல் நாளிலேயே சாதனை புரிந்துள்ளது 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம்.
2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிகிறது. கடந்த வருடம் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாம் பாகமான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' வெளியாகி, 2 பில்லியன் டாலர்வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.
இதன் அடுத்த பாகமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' நேற்று (ஏப்ரல் 26) வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடித்துள்ள இப்படத்தை, ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கியுள்ளனர்.
'அவெஞ்சர்ஸ்' படங்களுடைய இறுதி பாகம் என்பதால், உலகளவில் பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியானது. முதல் நாளிலேயே உலக அளவில் 305 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. மேலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் சேர்த்து, இந்தியாவில் 53.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
"மார்வெல் ரசிகர்கள் எந்தளவுக்கு அவெஞ்சர்ஸ் படங்களுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் என்பதற்கு இந்த வரவேற்பே சாட்சி. 11 ஆண்டுகளான பயணத்தின் இறுதிப்படம் எப்படியிருக்கும் என்பதைக் காண மிகவும் ஆவலாக ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள்" என்று டிஸ்னி இந்தியாவின் தலைவர் பிக்ரா தெரிவித்துள்ளார்.