ஹாலிவுட்

2 நாளில் 100 கோடி; இந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனையை நிகழ்த்திய அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்

செய்திப்பிரிவு

'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் வெளியான 2 நாளில் ரூ. 104 கோடி வசூலித்து புதிய சாதனைய நிகழ்த்தியுள்ளது.

2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிகிறது. கடந்த வருடம் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாம் பாகமான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' வெளியாகி, 2 பில்லியன் டாலர்வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.

இதன் அடுத்த பாகமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' நேற்று (ஏப்ரல் 26) வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடித்துள்ள இப்படத்தை, ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கியுள்ளனர்.

'அவெஞ்சர்ஸ்' படங்களுடைய இறுதி பாகம் என்பதால், உலகளவில் பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியானது. முதல் நாளிலேயே உலக அளவில் 305 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. மேலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் சேர்த்து, இந்தியாவில் 53.10 கோடி ரூபாய் முதல் நாள்  வசூல் செய்தது.

இந்நிலையில் இது குறித்து பிரபல இந்தி திரைப்பட விமர்சகரும், சினிமா வர்த்தக நிபுணருமான தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' இதற்கு முந்தைய சாதனைகளை திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பாலிவுட்டின் எந்த பெரிய படங்களுக்கும் செய்ய முடியாத 2 நாள் வசூலை செய்துள்ளது. வெள்ளிகிழமை ரூ.53.10 கோடி, சனி 51.40 கோடி. நெட் வசூல் ரூ.104 கோடி. மொத்த வசூல் ரூ. 124. 40 கோடி வசூலித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 'பேட்ட' 1.12 கோடி ரூபாயும், 'விஸ்வாசம்' 88 லட்ச ரூபாயும் முதல் நாளில் வசூலித்தது. இந்த இரண்டையுமே முந்தியுள்ளது 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தின் வசூல். முதல் நாளில் 1.17 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT