'அவெஞ்சர்ஸ்' திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரூஸோ இந்திய ரசிகர்களைச் சந்திக்க மும்பை வரவுள்ளார்.
'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம்' ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. 2009-ம் ஆண்டு தொடங்கிய மார்வல் சினிமாடிக் உலகத்தின் கதை இந்த 'எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிகிறது. கடந்த வருடம் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாம் பாகமான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' வெளியாகி 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியே எண்ட்கேம்.
ரூஸோ சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இருவரும் தான் 'கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்', 'சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்கள்.
படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படக்குழுவினர் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்டு வருகின்றனர். அப்படி, இந்திய ரசிகர்களைச் சந்திக்க, அவெஞ்சர்ஸ் இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரூஸோ மும்பைக்கு வருகிறார். ஏப்ரல் 1 மற்றும் 2 என இரு தினங்கள் ஜோ இந்தியாவில் இருப்பார்.
"இந்தியாவில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' படத்துக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய ரசிகர்கள் எண்ட்கேம் படத்தைப் பார்க்க நானும் காத்திருக்கிறேன். எங்கள் படங்களை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. இந்தியா வருவதையும், இந்திய ரசிகர்களைச் சந்திப்பதையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று ஜோ ரூஸோ கூறியுள்ளார்.
ஆங்கிலம், இந்தி, தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவெஞ்சர்ஸ் வெளியாகிறது.