விகோ மார்டென்சன் மற்றும் மஹேர்ஷாலா அலி ஆகியோர் நடித்து இந்த ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான 'கிரீன் புக்'கிற்கு வான்கார்டு 2018 விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாம் ஸ்பிரிங்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்நகரம் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 198 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்விழாவில் பங்கேற்கும் படங்களில் விருது பெறும் படங்களுக்கு ஆஸ்கர் விருதுக்கும் வாய்ப்பிருப்பது கடந்த ஆண்டுகளில் நிரூபணமாகியுள்ளது.
ஏராளமான ஆஸ்கர் விருதுகளை வென்ற 'தி ஷேப் ஆப் தி வாட்டர்' மற்றும் 'லாலா லேண்ட்' ஆகிய படங்கள் முதன்முதலில் வான்கார்டு விருது பெற்ற படங்களாகும்.
இதுகுறித்து பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழாக்குழுத் தலைவர் ஹரோல்டு மாட்ஸ்னர் தெரிவித்ததாவது:
''விழாவில் பெரிதும் ரசிக்கப்பட்ட படம் 'கிரீன் புக்'. இதில் நடித்த விகோ மார்டென்சன் மற்றும் மஹேர்ஷாலா அலி ஆகிய இருவரும் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுவிட்டார்கள்.
டாக்டர் டான் ஷைர்லி எனும் புகழ்பெற்ற பியானிஸ்ட் தெற்கே வெகுதூரம் இசைப் பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு கார் டிரைவராகவும் பாதுகாவலராகவும் நியூயார்க்கின் நகர செக்யூரிட்டி ஒருவர் நியமிக்கப்படுகிறார். பயணத்தின்போது இவர்கள் இருவருக்கும் ஏற்படும் அற்புதமான நட்பையே இப்படம் சித்தரிக்கிறது. ஓர் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது.
இப்படத்தின் இயக்குநர் பீட்டர் ஃபேரெலி இப்படத்தின் இணை திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றி இப்படத்தின் நடிகர்கள், இயக்குநரும் நிச்சயம் விருது பெறுவதற்குண்டான ஒரு இதயப்பூர்வமான திரைப்படத்தை வழங்கியுள்ளார். இப்படத்திற்கு வான்கார்டு விருது வழங்குவது நமக்கு கௌரவம் தரக்கூடிய ஒன்றேயாகும்''.
இவ்வாறு விழாக் குழுத் தலைவர் தெரிவித்தார்.
இப்படத்தின் இரு நடிகர்களும், இயக்குநரும் விருது விழாவுக்கு நேரில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.