ஆஸ்கர் விருது விழாவை ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரையன் (conan o'brien) தொகுத்து வழங்க இருக்கிறார்.
97-வது ஆஸ்கர் விருது விழா அடுத்த வருடம் மார்ச் 2-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த விருது விழாவைப் போலவே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவருக்கும் முக்கியத்துவம் உண்டு.
இந்த விழாவை நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வந்தார். அடுத்த வருடமும் அவரே தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டதால் ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்க இருக்கிறார்.
இதை ஆஸ்கர் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜானட் யங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.நடிகர் கோனன் ஓ பிரையன், லேட் நைட் டாக் ஷோ நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கெனவே, எம்மி விருது, எம்டிவி திரைப்பட விருது உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். ஆஸ்கர் விருது விழாவை முதன் முறையாகத் தொகுத்து வழங்க இருக்கிறார்.