சென்னை: டாம் குரூஸ் நடித்துள்ள ‘மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெகனிங்’ (Mission: Impossible The Final Reckoning) படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசர் எப்படி? - அட்டகாசமான பின்னணி இசையுடன் தொடங்கும் டீசரில் பிரமாண்ட காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கூடவே டாம் குரூஸில் மலைக்க வைக்கும் சாகசங்களும், அதிரடியும் ஈர்க்கிறது. கடல், பனிகட்டி என தண்ணீரைச் சுற்றியே பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன. ‘ஏஐ’ மையமாக வைத்து முந்தைய பாகம் உருவாக்கப்பட்டது. இந்தப் பாகத்தில் நீரைச்சுற்றியே மிஷன் இருக்கும் என தெரிகிறது. விறுவிறுப்பாக நகரும் காட்சிகள், ஆர்வமூட்டும் பின்னணி இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வருகிறது.
ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி வசூலை குவித்தது. இதையடுத்து 8-ம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ: