ஹாலிவுட்

ஜோனதன் மேஜர்ஸ் நீக்கம் எதிரொலி: ‘அவெஞ்சர்ஸ்: தி காங் டைனாஸ்டி’ தலைப்பு மாறுகிறது

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் படங்களில் முக்கிய வில்லனாக ‘காங்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜோனதன் மேஜர்ஸ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘அவெஞ்சர்ஸ் 5’ திரைப்படத்தின் தலைப்பை மாற்ற மார்வெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மேஜர்ஸ். இவர் பிரிட்டிஷ் நடன இயக்குநர் கிரேஸ் ஜப்பாரியைக் காதலித்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின்போது, ஜோனதன், அவரை கழுத்தை நெரித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தனது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கழுத்து, காது பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் கிரேஸ் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் ஜானதனை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, மார்வெல் நிறுவனத்தின் அடுத்தடுத்த படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மார்வெல் படங்களின் ‘காங் தி கான்கரர்’ என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்துவந்தார்.

ஜானதன்ர் மேஜர்ஸ் மார்வெல் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டதன் எதிரொலியாக, அவரை பிரதான வில்லனாகக் கொண்ட அனைத்துப் படங்களின் கதைகளும் மாற்றப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளியான ‘லோகி’ தொடரின் இரண்டாவது சீசனில் காங் கதாபாத்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ‘அவெஞ்சர்ஸ் 5’ திரைப்படத்துக்கு ‘அவெஞ்சர்ஸ்: தி காங் டைனாஸ்டி’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது அப்படத்தின் பெயரை மாற்ற மார்வெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தானோஸுக்குப் பிறகு மிகப்பெரிய வில்லனாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘காங்’ கதாபாத்திரம் முடிவுக்கு வந்ததால், மார்வெலின் அடுத்த பெரிய வில்லனாக ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT