ஹாலிவுட்

மீண்டும் வோல்வரின் ஆக ஹ்யூ ஜாக்மேன்! - 'Deadpool & Wolverine' டீசர் எப்படி? 

செய்திப்பிரிவு

பல ஆண்டுகளுக்கு ‘வோல்வரின்’ கதாபாத்திரத்தில் ஹ்யூ ஜாக்மேன் நடித்திருக்கும் ‘டெட்பூல் & வோல்வரின்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மார்வெல் நிறுவனம் இந்தியாவில் பிரபலமாவதற்கு முன்பே இங்கே மிக பிரபலமாக இருந்த சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களில் ஒன்று ‘வோல்வரின்’. எக்ஸ் மேன் படங்களின் வாயிலாக உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த இந்த கதாபாத்திரத்துக்கான காப்புரிமை அப்போது 20த் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்திடம் இருந்ததால் இது பல வருடங்களாக மார்வெல் படங்களில் இடம்பெறாமல் இருந்துவந்தது. தற்போது 20த் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை டிஸ்னி வாங்கிவிட்டதால் எக்ஸ் மென் கதாபாத்திரங்களும் இனி வரும் மார்வெல் படங்களில் இடம்பெற உள்ளனர். அந்த வகையில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘லோகன்’ படத்துக்குப் பிறகு ‘வோல்வரின்’ கதாபாத்திரம் தற்போது உருவாகி வரும் ‘டெட்பூல் & வோல்வரின்’ படத்தின் மூலம் மார்வெல் உலகின் நுழைந்துள்ளது. இப்படத்தின் டீசரை மார்வெல் நிறுவனம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? - ‘டெட்பூல்’ படங்களில் மற்ற மார்வெல் படங்களைப் போல் அல்லாமல் ரத்தம் தெறிக்கும் வன்முறையும், பகடியான வசனங்களும் நிறைந்திருக்கும். அந்த வகையில் முதல்முறையாக மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ‘ஆர் ரேட்டட்’ (18+) படமாக இப்படம் வெளியாக உள்ளது. டீசரின் தொடக்கத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் நாயகன் வேட் வில்சன், ‘லோகி’ தொடரில் வந்த டிவிஏ அமைப்பின் காவலர்களால் பிடித்துச் செல்லப்பட்டு, அவரை மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸுக்குள் கொண்டு வருவதாக காட்டப்படுகிறது. டெட்பூல் கதாபாத்திரத்துக்கே உரிய நக்கலான வசனங்கள், இரட்டை அர்த்த ஜோக்குகள் இதிலும் காணப்படுகின்றன. மல்டிவெர்ஸ் மூலம் டீசரின் இறுதியில் வோல்வரினின் உருவம் நமக்கு நிழலாக காட்டப்படுகிறது. ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. ‘டெட்பூல் & வோல்வரின்’ டீசர் வீடியோ:

SCROLL FOR NEXT