ஜோ பைடன் 
ஹாலிவுட்

"வரலாறு பார்த்துக் கொண்டிருக்கிறது; போரை நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுங்கள்" - பைடனுக்கு ஹாலிவுட் கலைஞர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஹாலிவுட் நடிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் பணயக்கைதிகளாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் இதுவரை 4,100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹாலிவுட் கலைஞர்கள் அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், “உங்கள் நிர்வாகத்திடமும், உலகில் உள்ள அனைத்து தலைவர்களிடமும், புனித பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். சிறிதும் தாமதமின்றி போர் நிறுத்ததுக்கு அழைப்பு விடுக்கவும், காசா மீதான குண்டுவெடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்கவும் உங்களை வலியுறுத்துகிறோம். எங்களின் எதிர்கால சந்ததியினரிடம் நாங்கள் எதுவுமே செய்யாமல் மவுனமாக இருந்தோம் எனச் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.

ஐநாவின் அவசரகால நிவாரண தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் சொன்னதைப்போல ‘வரலாறு பார்த்துகொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள் அவர்களை சென்று சேர அனுமதிக்கவேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். சூசன் சரண்டன், கிறிஸ்டன் ஸ்டீவர்ட், குயின்டா புருன்சன், ரமி யூசுப், ரிஸ் அகமது மற்றும் மஹர்ஷலா அலி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ஹாலிவுட் கலைஞர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பைடனுக்கு அனுப்பியுள்ளனர்.

நிவாரண உதவிகளை கொண்டு செல்லும் லாரிகள் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் காசாவை சென்றடையும் என ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT