சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்பட ஆஸ்கர் விருதுக்கு உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 92 நாடுகள் போட்டியிடுகின்றன.
இப்படங்களில் ஏஞ்சலினா ஜோலி நடித்துள்ள 'ஃபர்ஸ்ட் தே கில்ட் மை ஃபாதர்', ஃப்ரான்ஸ் திரைப்படம் 'பிபிஎம்', லெபனான் படமான 'தி இன்சல்ட்', நார்வே படமாம 'தெல்மா' ஆகியவை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
கான் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற ஸ்வீடன் படம் 'த ஸ்கொயர்'. இப்படத்தை ரூபன் ஆஸ்ட்லண்ட் இயக்கியுள்ளார். இப்படமும் இந்தப் போட்டியில் இருக்கிறது.
முதல்முறையாக ஹைத்தி, லாவோஸ், சிரியா ஆகிய நாடுகளும் ஆஸ்கர் போட்டியில் பங்குபெறுகின்றன.
அதிகாரபூர்வ இந்தியப் படமாக ஆஸ்கரில் நுழைகிறது 'நியூட்டன்' திரைப்படம். அமித் மசூர்கார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், ராஜ்குமார் ராவ், பங்கஜ் த்ரிபாதி, ரகுவீர் யாதவ் மற்றும் அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சத்தீஸ்கரின் மோதல் நிறைந்த காடுகளில் நேர்மையாகத் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் அதிகாரி நியூட்டன் குமாரின் போராட்டத்தைப் பற்றிப் பேசும் படம் 'நியூட்டன்'.
ஈரானியத் திரைப்படமான 'தி சேல்ஸ்மேன்', சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் என்று கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருந்தது.
ஆஸ்கர் விருதுகளுக்கான படப் பரிந்துரைகள் ஜனவரி 23 அன்று அறிவிக்கப்படும். லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் மார்ச் 4, 2018-ம் ஆண்டில் அடுத்த ஆஸ்கர் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.