பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் போன்ற ஏராளமான மக்கள் இந்த உலகம் முழுவதும் இருக்கின்றனர் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த 1998-ம் ஆண்டு வெளியாகி, சிறந்த படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் (65) கடந்த 35 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் படவிநியோகம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகள், பெண் உதவியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கடந்த வாரம் ‘நியூ யார்க் டைம்ஸ்’ விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டது.
இந்த செய்தி தந்த உந்துதலை அடுத்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தாமாகவே முன்வந்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை கூறினர். ஹாலிவுட்டில் மிக அதிக ஊதியம் பெரும் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி, கைனத் பால்ட்ரோ, காரா டெலவிங் உட்பட பல முன்னணி நடிகைகளும் துணை நடிகைகளும் புகார் கூறி வருபவர்களில் அடங்குவர்.
இந்நிலையில் இதுகுறித்து பெண்கள் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரியங்கா, ''ஹாலிவுட்டில் மட்டும் ஒரேயொரு ஹார்வி வெய்ன்ஸ்டீன் இல்லை. இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகள் இனி வெளிச்சத்துக்கு வரும் என்று நினைக்கிறேன். இது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. பாலியல் தொந்தரவுகள் உலகம் முழுக்க இருக்கின்றன. பெண்களின் வலிமையை எடுத்தாள நினைக்கும் ஆண்களின் அதிகாரம் அது.
உலகம் எப்போதுமே தலைசிறந்த இடமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது அப்படி இருப்பதில்லை. இது பாலினம் குறித்த பிரச்சினை அல்ல. பாலியல் குறித்ததும் அல்ல. அதிகாரம் பற்றிய வேட்கை அது.
இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்கள் பறிபோகும் என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதன்மூலம் பெண்கள் விருப்பமில்லாமலேயே உடன்படுகின்றனர்'' என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.