பிரபல இந்தி நடிகையான மலைகா அரோரா, திரைத்துறையில் 30 ஆண்டுகளைக் கடந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சமூகத்தில் நிலவும் பாலினப் பாரபட்சம் குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறும்போது, “எனது தோற்றம் குறித்து பாராட்டுகள் குவிந்தாலும், மற்றொரு பக்கம் வயதாவது குறித்த கவலை ஏற்படுகிறதா? என்று கேட்கின்றனர்.
இது ஒரு இரட்டை முனை கத்தி போன்றது. சில நேரங்களில் இந்த எண்ணம் என் மனதைக் கடந்து செல்லும்; நான் என்னையே கேள்வி கேட்டுக்கொள்வேன். ஆனால் மற்ற நேரங்களில், இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நான் விரும்புவதைச் செய்கிறேன், அதை அனுபவிக்கிறேன். நான் இப்போதுதான் என் வாழ்வின் மிகச்சிறந்த காலகட்டத்தில் இருப்பதாக உணர்கிறேன்.
அதே நேரம், முன்பு அழகாக இருந்தீர்கள், இப்போது வயதாகிவிட்டதே, இப்போதும் கவர்ச்சியாக உணர்கிறீர்களா? என்ற கேள்விகள் பெண்களை நோக்கி மட்டுமே வீசப்படுகின்றன. இதே போன்ற கேள்வியை ஒரு ஆணிடம் யாரும் கேட்டு பார்த்ததுண்டா? ஆண்களிடம் அவர்களது வயது குறித்து யாரும் கேள்வி கேட்பதில்லை. எனக்கு வயது என்பது முட்டுக்கட்டை அல்ல. இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறேன். அந்த ஆர்வம் இருக்கும்போது, வயதான தோற்றம் என்பது என்னைப் பாதிப்பதில்லை.
உடல் ரீதியான தோற்றம் மட்டுமே முக்கியமல்ல. மனநிலை மற்றும் உணர்ச்சி ரீதியான பலத்துடன் அதைச் சமநிலைப்படுத்த வேண்டும். உங்களை இயக்கும் சக்தி எது? ஒவ்வொரு நாளும் எழுந்து, ‘இந்த நாளை வென்று காட்டு’ என்று உங்களைத் தூண்டுவது எது? என்பதுதான் முக்கியம். அதனால் ஒவ்வொரு முறையும் கண்ணாடியை பார்த்து, ‘நான் அழகாக இருக்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டு முழிப்பதில்லை. இன்று ஒரு புதிய நாள், இதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எதையாவது புதிதாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே நான் எழுகிறேன்” எனத் தெரிவித்தார்.