நடிகர் யாஷ்
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’ படத்தில் ராவணனாக நடித்துள்ளார், ‘கே.ஜி.எஃப்’ யாஷ். இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து யாஷ் கூறும்போது, “சிறுவயதிலிருந்தே நாம் ராமாயணக் கதையைக் கேட்டே வளர்ந்தவர்கள். நான் முதலில் கேட்ட கதையும் அதுதான். என் தாத்தா இந்தக் கதைகளை எனக்குச் சொல்லுவார். அதனால், ராவணன் பற்றிய ஒரு கற்பனை நம் மனதில் ஏற்கெனவே இருக்கும்.
மேலும், பலரும் அந்தக் கதாபாத்திரத்தை பல்வேறு விதங்களில் திரையில் சித்தரித்திருப்பதையும் பார்த்திருக்கிறோம். ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி முன்பே யாருக்கும் எந்தக் கற்பனையும் இல்லையென்றால், நீங்கள் எப்படி நடித்தாலும் அதுவே அந்தக் கதாபாத்திரத்தின் அடையாளமாக மாறிவிடும். ஆனால், ராவணன் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான கதாபாத்திரத்தில், மக்கள் ஏற்கெனவே ஒரு உருவத்தை மனதில் வைத்திருப்பதால், ஒரு நடிகராக அது கூடுதல் சவாலை ஏற்படுத்தியது.
அதிர்ஷ்டவசமாக, என் இயக்குநரும், எழுத்தாளர்களும் அந்தக் கதாபாத்திரத்தை வித்தியாசமான கோணத்தில் அணுகுவதற்கான முழு சுதந்திரத்தை எனக்குக் கொடுத்தார்கள். அதனால்தான் ராவணனாக புதிய விதத்தில் என்னால் நடிக்க முடிந்தது. அதை ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.