பாட்னா: பாட்னாவில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வர்களின் தற்கொலை மரணத்தை நாம் இயல்பாக்கி விட்டோம்; பாட்னா சம்பவம் மிகவும் வருத்தத்துக்குரியது என்று நடிகை டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் நடிப்பில் உருவாகி உள்ள ‘அஸ்ஸி’ திரைப்படம் வரும் 20-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கி உள்ளார். இதில், கனி ஸ்குருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ஊழல் நிறைந்த அமைப்பு மற்றும் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் வழக்கறிஞராக டாப்ஸி நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற விவகாரத்தை மையக்கருவாக கொண்ட படம் இது என தகவல்.
இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டாப்ஸி பேட்டி அளித்தார். அப்போது நீட் தேர்வுக்கு தயாரான மாணவி ஒருவரின் மரணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. “இங்கு மட்டுமல்ல இது மாதிரியான சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. இது எனக்கு மிகுந்த வருத்தம் தருகிறது. இந்த மரணங்களின் எண்ணிக்கை கூடுதலாக கூட இருக்கலாம்.
இப்போது நாம் இதுபோன்ற தற்கொலை மரணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்திவிட்டோம். அதை நாம் இயல்பாக்கி விட்டோம்; இது மிகவும் வருத்தத்துக்குரியது. ” என்று அவர் தெரிவித்தார். பாட்னாவில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவி ஒருவரின் மரணம் சர்ச்சையாகி உள்ள நிலையில் டாப்ஸி இதை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்தும் அவர் இதில் பேசி இருந்தார்.