நடிகர் ஷாருக் கான்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை பாந்த்ராவில் ‘மன்னத்’ என்ற பங்களாவில் வசிக்கிறார்.
கடற்கரை அருகில் உள்ள இந்தப் பங்களாவை புதுப்பித்து, கூடுதலாக 2 தளங்கள் கட்ட முடிவு செய்திருந்தார். இதற்காக மகாராஷ்டிர கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையமும் தேசிய பசுமை தீர்ப்பாயமும் அனுமதி வழங்கி இருந்தது.
இந்த அனுமதியில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தோஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷோயப் ஆலம், ரூ.5 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கட்டிடங்களுக்கு பெற வேண்டிய அனுமதிகள், முறையாகப் பெறப்படவில்லை என்றும் ஷாருக் கான், பிரபல நடிகர் என்பதற்காகச் சலுகை வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
“சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் கூடுதல் தளங்களை அமைக்க விரும்பினால், அது அவர்கள் விருப்பம். இதில் வேறு யாரோ ஏன் தலையிட வேண்டும் ? ” என்று உச்சநீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்து அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.