பாடகி ஸ்ரேயா கோஷல்
பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திரையுலகில் வாய்ப்புகளுக்காக பாலியல் சுரண்டல் இருப்பது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “இப்போது நிலைமை கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. சமூக ஊடகங்களின் பரவலுக்கு முன்பு, திரையுலகில் உள்ள பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். நான் இளம் வயதிலேயே திரையுலகுக்கு வந்துவிட்டதால் நான் செல்லும் இடங்களுக்கும் என் பெற்றோரும் எப்போதும் வருவார்கள். அதனால், எனக்கு ஏதும் இதுபோன்ற பிரச்சினை வந்ததில்லை.
திரையுலகில் ஊதிய சமத்துவம் குறித்த தவறான புரிதல்கள் இருக்கின்றன. இது பாலினம் சார்ந்த விஷயம் அல்ல. ஆண்களும் இதை எதிர்கொள்கிறார்கள். நான் ஆரம்பகாலத்தில் பல பாடல்களைப் பணமில்லாமல் பாடி இருக்கிறேன். தற்போது திரையுலகில் உள்ள அனைத்து நல்ல பாடகர்களும் பல பாடல்களை இலவசமாகவே பாடுகிறார்கள். சிறந்த வாய்ப்புகள் வரும்போது, அவர்கள் பெரிய தொகையையும் வசூலிக்கிறார்கள்” என்றார்.