பிரபல பாடகியான ஷ்ரேயா கோஷல் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார். அவர் ‘தி அன்ஸ்டாப்பபிள் டூர்’ என்ற தலைப்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.
இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு பாடலின் உண்மையான வெற்றி எது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறும்போது, “ஒரு பாடலின் உண்மையான வெற்றியை, சமூக ஊடகங்களில் கிடைக்கும் லைக்ஸ்களும் வியூவ்ஸ்களும் வரையறுக்காது.
நேரடியாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில், பார்வையாளர்களும் அப்பாடலை நினைவில் வைத்துக் கொண்டு சேர்ந்து பாடுவதுதான் உண்மையான வெற்றி. ஒரு பாடல் வெற்றிக்கான அளவுகோல் அதுதான். முதல் முறையாக ஒரு பாடலைப் பாடினால், அடுத்த முறை பார்க்கும்போது, “மீண்டும் பாட முடியுமா?” என்று ரசிகர்கள் கேட்டால், அதுதான் உண்மையான வெற்றி.
சமூக ஊடகங்கள் இசையை மாற்றியுள்ளன. 2013-ல் நான் பாடிய பாடல் இப்போது வைரலானது. இது சமூக ஊடகங்களின் மாயாஜாலம் தான்” என்றார்.