நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படத்தின் ட்ரெய்லர் குறித்த விரைவுப் பார்வை இது.
ட்ரெய்லரின் அறிமுகக் காட்சியில் ஆஜானுபாகுவான வீரனொருவன் பிரம்மாண்ட கோட்டை வாசல் கதவை எட்டி உதைக்கிறான். யார் நீ என்ற கேள்வியைத் தொடர்ந்து ‘உன் புதிய அரசு’ என சொல்ல, நடக்கும் சண்டைகளைத் தொடர்ந்து, ‘இந்திர, பூமி, பாதாள உலகத்தின் அதிபதி ராவணன்’ என அந்த கதாபாத்திரம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது.
ராமனின் பிறப்பு, ராமனை கைகேயி வனவாசத்துக்கு அனுப்புதல், உடன் சீதையும், லட்சுமணனும் செல்லுதல், சூர்ப்பனகையின் மூக்கறுப்பு, சீதையை ராவணன் கடத்துவது, போர் என பிரம்மாண்ட இதிகாசத்தின் ரசம் பிழிந்து கொடுக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
ராவணனின் மூர்க்கம் நிரம்பியவாறு யஷ் வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்பட, ரன்பீர் கபூரிடம் ராமனின் ஈர்ப்பு பெரிதாக ஏற்படவில்லை. வந்தபோகும் இரண்டொரு காட்சிகளில் சாய் பல்லவி சீதையாக கவர்கிறார்.
கிராபிக்ஸ் காட்சிகளும் இந்திய இதிகாசத்தின் பிரம்மாண்டத்தை வேடிக்கை சண்டை போல காட்டுகின்றன. ட்ரெய்லரில் உள்ளதே படத்தில் இருக்குமென்றால், இன்னொரு வீடியோ கேம் உணர்வையே ஏற்படுத்தக் கூடும்.
ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை 4.10 நிமிடம் ஓடும் ட்ரெய்லருக்கு விறுவிறுப்பு தந்து தரம் உயர்த்தி இருக்கிறது.
முன்னதாக, ஜூலை 24-ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ட்ரெய்லர், சர்வதேச விநியோகத்துக்காக சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் அறிவிக்கப்பட்டபடி இன்று (ஜூலை 30) அதிகாலையில் வெளியிடப்பட்டது.