பாலிவுட்

‘ராமாயணா’ காட்சிகளை இணையத்தில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை

ப்ரியா

மும்பை: நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணா: பாகம் 1' திரைப்படத்தை திரையரங்குகளில் சட்டவிரோதமாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதைத் தொடர்ந்து, திரையரங்குகளுக்குள் வைத்து எடுக்கப்பட்ட ஏராளமான காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாகப் பரப்பப்பட்டு வருவதாக தயாரிப்புக் குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்துத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

வணிகசார் அறிவுசார் சொத்துரிமை வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 2 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகளின்படி, 'ராமாயணா' திரைப்படத்தையோ அல்லது அதன் எந்தவொரு பகுதியையோ அனுமதியின்றி பதிவு செய்வதோ, பதிவேற்றம் செய்வதோ அல்லது பிறருக்குப் பகிர்வதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றித் திரைப்படக் காட்சிகளைப் பகிர்வது காப்புரிமைச் சட்டம் 1957, திரையரங்கச் சட்டம் 1952, பாரதிய நியாய சன்ஹிதா 2023, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ஆகியவற்றின் கீழ் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றவியல் செயலாகும் என்றும், இது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் படத்தைப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே இணையத்தில் பதிவிடப்பட்ட திருட்டுத்தனமான காணொளிகளை உடனடியாக நீக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் மீது எந்தவித முன்அறிவிப்புமின்றி சிவில், குற்றவியல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இணையத் தளங்கள் மூலம் காவல்துறைக்குத் தெரிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT