நடிகை ராதிகா ஆப்தே, ‘அக்கா’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள இதில், கீர்த்தி சுரேஷ் ‘பவானி’ என்ற கதாபாத்திரத்திலும், ராதிகா ஆப்தே ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
அக்.30-ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இத்தொடரின் புரமோஷனில் கலந்துகொண்ட ராதிகா ஆப்தே, திரையுலகில் நிலவும் பாக்ஸ் ஆபீஸ் நிச்சயமற்ற தன்மை காரணமாக, பெரும்பான்மையான நடிகைகள், ஹீரோக்களை மையமாகக் கொண்ட படங்களிலேயே நடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் எது வெற்றிபெறும், எது தோல்வியடையும் என்று கணிக்க முடியவில்லை. நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படம், மிகச் சிறந்த படமாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் தோல்வியடையக்கூடும்.
ஆலியா பட் அல்லது தீபிகா படுகோன் போன்ற நடிகைகளைப் போல, படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் அளவுக்கு எனக்கு ‘ஓபனிங்’ இல்லை. நான் வெளிப்படையாகவே இதைக் கூறுகிறேன். எனவே, நடிகர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களில் நான் இடம்பெற வேண்டிய சூழல் உள்ளது.
ஒரு படம் திரையரங்கில் வெளியாகிறதா அல்லது ஓடிடி -யில் வெளியாகிறதா? என்பதை வைத்து படங்களை நான் தேர்ந்தெடுப்பதில்லை. அதைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. இது போன்ற விஷயங்களில் பல வணிக ரீதியான முடிவுகள் உள்ளன. அதனால், ‘எப்படியாவது படம் வெளியாகட்டும்’ என்றுதான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.