சல்மான் கானின் மான் வேட்டை வழக்கை மையமாக வைத்து உருவாகும் ‘காலா ஹிரன்’ படத்தை நிறுத்தக் கோரி அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 2 அரியவகை மான்களை, சல்மான் கான் வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைடத தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் பட்டு வழக்கு நடந்து வருகிறது. சர்ச்சைக்குரிய இச்சம்பவத்தின் பின்னணியில் ‘காலா ஹிரன்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் டீஸர் ஜூன் 20-ல் வெளியாக இருக்கிறது.
இந்த வேட்டை விவகாரத்தால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்தப் படம் குறித்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு மற்றும் விளம்பரப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சல்மான் கான் தரப்பில் இருந்து ‘காலா ஹிரன்’ தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “இந்தப்படம் சல்மான் கானின் நற்பெயரைக் கெடுக்கும் வகையிலும், அவரது தனிப்பட்ட உரிமைகளை மீறும் வகையிலும் உருவாக்கப்படுகிறது” என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.