இந்திப் பட இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை ‘ராமாயணா’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். 2 பாகமாக உருவாகியுள்ள இதன் முதல் பாகம் கடந்த 5-ம் தேதி வெளியானது.
இதில் ரன்பீர் கபூர், ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். மேலும் அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே என பலர் நடித்துள்ள இப்படம், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. வசூல் சாதனை படைத்து வரும் இப்படம் 13 நாட்களில் ரூ. 1,483.10 கோடி வசூலித்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள எஸ்.வி.எஃப் சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் நிறுவனம், ‘ராமாயணா’ ஓடும் திரையரங்கங்களில் அசைவ உணவுக்கு தடைவிதித்துள்ளது. இந்நிறுவனத்தின் 30 திரையரங்குகளில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, இப்படம் ஓடும் வரை திரையரங்குக்குள் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ‘ராமாயணா’ திரைப்படத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மற்ற திரைப்படங்களின் திரையிடல்களின் போது உணவு சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.