அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘த்ரிஷ்யம் 3’ இந்திப் படத்தை பாராட்டியுள்ள நடிகர் மோகன்லால், படக்குழுவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்டுடியோ 18 தயாரிப்பு நிறுவனம், நடிகர் மோகன்லால் படத்தை வாழ்த்திப் பேசும் வீடியோவை அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் மோகன்லால், “நான் ‘த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படம் பார்த்தேன். மிகவும் விரும்பப்பட்ட அந்தப் பயணத்தை அவர்கள் பொருத்தமாக நிறைவு செய்திருக்கும் விதம் என்னைக் கவர்ந்துள்ளது. அபிஷேக் பதாக், குமார், பதாக், அஜய் தேவ்கன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். சிறப்பாக செய்துள்ளீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பகிர்ந்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், ‘உங்களின் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி மோகன்லால் சார்’ என்று தெரிவித்துள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஜய் தேவ்கன், “இந்த முறை நாங்கள் கதையை முற்றிலும் மாற்றி இருக்கிறோம். அதனால் மோகன்லால் படத்தைப் பார்த்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். அவர் (மோகன்லால்) படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்” என கூறி, அவர் விடுமுறையில் சென்றிருப்பதால் விரைவில் அவர் படத்தைப் பார்ப்பார் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அஜய் தேவ்கனின் அந்த விருப்பத்தை மோகன் லால் தற்போது நிறைவேற்றி உள்ளார்.
‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகம் 2013-ல் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரின் மூன்றாம் பாகமான ‘த்ரிஷ்யம் 3’ கடந்த மே 21-ம் தேதி வெளியானது.
ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்தப் படங்களில் மோகன்லால், ஜார்ஜ் குட்டியாக நடித்திருந்தார்.
மலையாளப் படத்தை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட ‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகம் 2015-ம் ஆண்டு வெளியானது. அதனை மறைந்த நிஷிகாந்த் காம்த் இயக்கி இருந்தார். இரண்டாவது பாகம், அபிஷேக் பதாக் இயக்கத்தில் 2022-ல் வெளியானது.
அதன் மூன்றாவது மற்றும் இறுதி பாகமான த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன் அக்டோபர் 2-ம் தேதி வெளியானது. முதல் இரண்டு பாகங்களும் மூலத்தை தழுவி எடுக்கப்பட்ட நிலையில், இந்த மூன்றாவது பாகம் மலையாளப் படத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாக கூறப்பட்டது.