இளையராஜா இசையமைத்த ‘கோந்தல்’ என்ற மராத்தி திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் இஷிதாதேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி, நிஷாத் போயிர் மற்றும் அனுஜ் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இப்படம் மகாராஷ்டிராவின் பாரம்பரியமான ‘கோந்தல்’ என்ற நாட்டுப்புறச் சடங்குகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. திருமணக் கொண்டாட்டமாகத் தொடங்கும் கதை, பின்னர் ஆசை, பொறாமை, துரோகம் மற்றும் மறைக்கப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் நிறைந்த கதையாக மாறுகிறது.
திருமண வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் இளம் பெண் ஒருவரைச் சுற்றி நகரும் இப்படம், கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதை இப்படம் பெற்றது. இந்நிலையில், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99 -வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில், சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவில் பங்கேற்க இந்தியா சார்பில் ‘கோந்தல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.