கதைப் படங்கள், மென்னுணர்வுப் படங்கள், மாஸ் மசாலா படங்கள் என வகை பிரிந்து கிடக்கிறது இந்திய மொழிகளின் வெகுஜன சினிமா உலகம். திரை வெளியில் நடிகராக நுழையும் ஆண் - பெண் என யார் ஒருவரும் தன்னுடைய தனித்துவம் என்னவென்று தெரியாமல் இருந்தால், சில படங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுவார்கள். எல்லா வகை திரைப்படங்களிலும் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைத்தாலும் களமாடக் கற்று வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நானா படேகர் என்கிற சாஸ்வதமான கலைஞனைப் போல் நிலைத்து நிற்க முடியும்.
நானா படேகரை (விஸ்வநாத் படேகர்) வெறுத்தவர்கள் கூட அவரது கால்ஷீட்டுக்கு அலைந்த நிலையை அந்த மகா கலைஞன் உருவாக்கினார். அது அவரது தனித்துவமான நடிப்பு முறையால் தனக்குத் தானே அமைத்துக்கொண்ட உறுதியான மேடை. நானா படேகர் என்கிற கலைஞனை நாடக அரங்கம்தான் திரைவெளிக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.
அரங்க மொழியின் ஆதிக்கத்துடன் திரைக்கு வந்தாலும் அவர் திரைவெளிக்கான நடிப்பில் தலை சிறந்து விளங்கினார். ஏற்கும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை இயல்பான குரல் ஏற்ற இறக்கங்களாலும் வெடித்துச் சிதறும் தீவிர உடல் மொழியாலும் அதிரச் செய்த கலைஞர். ஆனால், அந்த அதிர்வுகளை ‘மிகை’ என்கிற எல்லைக்கு எடுத்துச் சென்றுவிடாமல் கட்டுப்படுத்தும் நடிப்பின் உயரிய தொழில்நுட்பம் நானாவுக்கு கலைவந்த கலையாக கடைசி வரை விளங்கியது.
மராத்தி நாடகச் சூழலின் செறிவான பின்புலத்திலிருந்து மாரத்தி பின்னர் இந்தித் திரையுலகுக்கு வந்த நானா படேகரின் மறைவு, ஒட்டுமொத்தமாகவே இந்திய மொழி திரையுலகங்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு.
மேடை உருவாக்கிய செழுமை
மும்பையின் சர் ஜே.ஜே. அப்ளைடு ஃபைன் ஆர்ட் கல்லூரியில் பயின்ற நானா படேகரின் நடிப்புப் பயணம், மராத்தி நாடக மேடைகளில் இருந்தே தொடங்கியது. 1930-களில் எல்லா தென்னிந்திய மாநிலங்களுக்கும் பயணப்பட்ட செவ்வியல் தன்மை கொண்ட மராத்தி நாடக உலகம், புத்தாயிரத்துக்குப் பிறகு உரையாடல்களின் தீவிரத்துக்கும், கதாபாத்திரங்களின் உளவியல் ஆழத்துக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.
இன்றைக்கும் மராத்தி நவீன நாடகங்களையும் சமூக நாடகங்களையும் வார இறுதியில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மும்பையில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடக ரசிகர்களின் மத்தியில் உருவெடுத்த கலைஞன் தான் நானா படேகர்.
ஒரு கட்டத்தில் நாடகங்களில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கத் தொடங்கிய நானாவுக்கு புகழைக் கொண்டுவந்து சேர்த்த மராத்தி நாடகம் ‘ஹமீதாபாய் சி கோத்தி’ (Hamidabai Chi Kothi).
நாடக மேடையில் சக கதாபாத்திரங்களின் வேகத்துக்கும் அவை அரங்கில் நுழைந்து பின்னர் வெளியேறும் கால அளவுக்கும் ஏற்ப சொற்களை வேகமாகப் பேசுவதும், அதேநேரம் கதையின் திரும்பம் தரும் உணர்வின் ஆழத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டிய கணத்தில் சட்டென்று நிறுத்தி ‘Pause’ கொடுத்து அமைதியைத் தனக்கான முக்கிய நடிப்பு உத்தியாக மாற்றுவதை தன்னுடைய பிரத்யேக நடிப்பு முத்திரையாக அரங்கம், திரைவெளி இரண்டிலுமே வெற்றிகரமாகக் கையாண்டார் நானா படேகர்.
திரைவெளியில் பிரபலமான பிறகு நாடகங்களில் நடிப்பது குறைந்துபோய், மாராத்தி - இந்தி வணிக சினிமாவில் வழக்கமான நாயக பிம்பங்களை உடைத்தெறிந்தார். அழகு, பளபளப்பான உடை என்பதையெல்லாம் தாண்டி, ஒரு சாமானிய மனிதனின் கோபம், விரக்தி, அதிகாரத்துக்கு எதிரான கொந்தளிப்பு ஆகியவற்றை தன் கூர்மையான கண்களாலும் முகம் முழுவதும் படரும் உணர்ச்சிகளாலும் கடத்தினார். அவரது ரியலிஸ்டிக் மற்றும் மெத்தட் ஆக்டிங் முறையை மதிப்பிடுவதென்றால் ‘தீயின் உடல்மொழி, தீவிரத்தின் முகம்பாவம், உறைய வைக்கும் மவுனம்’ ஆகியவற்றின் அட்டகாசமான கலவை எனலாம்.
பாலிவுட்டின் அக்னிப் பறவை
1980-களின் இறுதியில் இந்தித் திரையுலகில் நுழைந்த நானா, வழக்கமான எதிர்மறை - நேர்மறை நாயகன் கதாபாத்திர எல்லைகளை உடைத்து, ‘அமைதியற்ற மனிதனின் பிம்பமாக’ மாறிக் காட்டினார். அவரது நேர்த்தியும் நுணுக்கமும் கூடிய நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே இப்போதுவரை அதிகம் பார்க்கப்பட்டு வரும் நிலையில், எனக்குப் பிடித்த 10 படங்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
1. பரிந்தா (Parinda - 1989): விது வினோத் சோப்ரா இயக்கிய இப்படத்தில் அண்ணா என்கிற பாதாள உலகத் தலைவனாக நடித்தார். நெருப்பைக் கண்டு அஞ்சும் ஒரு தாதாவின் மனப் பிறழ்வையும் கொடூரத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
2. கிராந்திவீர் (Krantiveer - 1994): சமூகத்தின் சீரழிவுகளையும் ஊழலையும் கண்டு கொதித்தெழும் பிரதாப் திலக் என்கிற முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரரின் பேரனாக நடித்த கதாபாத்திரத்தின் மூலம் அடிப்படையான வாழ்வியல் மதிப்பீடுகளை இழந்து எதற்கோ ஓடும் இந்தியச் சமூகத்தை கேள்வி கேட்கும் ஆகச் சிறந்த வசன நடிப்பில் சிறந்து விளங்கி, இப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
3. பிரஹார் (Prahaar: The Final Attack - 1991): நானா படேகரே எழுதி இயக்கி, காலட்படை ராணுவ அதிகாரியாக நடித்த படம். ராணுவப் பயிற்சியின் கடுமையான ஒழுங்கையும், நாட்டின் சீரழிவைக் கண்டு குமுறும் அதிகாரியின் தவிப்பையும் மிக யதார்த்தமாகப் பதிவு செய்தார். ஓர் இயக்குநராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் தன்னை நிருபித்தார்
4. அங்கார் (Angaar - 1992): கட்டிடக் கலைஞராக இருந்து அதிகார வர்க்கத்தின் வன்முறையால் நிழலுலகத்துக்குள் தள்ளப்படும்போது மஜித் கான் என்கிற ஒரு டானாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து, இரண்டாவது முறையாகச் சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
5. அப் தக் சப்பன்ஹீ (Ab Tak Chhappan - 2004): மும்பை மாநகரக் காவல்துறையில் ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று பெயரெடுத்து பல்வேறு மனித உரிமை விசாரணைகளைச் சந்தித்த சாதவ் தயா கோக்லேவாக, ‘இன்ஸ்பெக்டர் சேது’ என்கிற கதாபாத்திரத்தில் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாத அமைதியான, ஆனால் பயங்கரமான உடல் மொழியை வெளிப்படுத்தி, தன்னுடைய நடிப்புப் பரிமாணத்தின் மற்றொரு கோணத்தைக் காட்டினார்.
6. வெல்கம் (Welcome - 2007): தென்னிந்தியாவில் இருந்து வந்து மும்பையை கட்டுப்படுத்தும் டான் கதாபாத்திரங்களுக்கு பெயர்பெற்ற இந்தி சினிமாவில் ‘உதய் ஷெட்டி’ என்கிற டான் கதாபாத்திரத்தின் மூலம் நகைச்சுவையிலும் தன்னால் சிரிக்க வைக்க முடியும் என்று நிருபித்தார்.
7. நட்சாம்ராட் (Natsamrat -2016): நாடக மேடையிலேயே நடிப்பைப் கட்டுப்படுத்தி நடிக்க முடியும், நான்கு கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்று காட்டிய ‘நட்சம்ராட்’ நாடகம் அவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தது. இதே நாடகம் திரைப்படமானபோது நானாவை விட வேறு யார் சிறந்த தெரிவாக இருந்திருக்க முடியும். திரையிலும் 4 கதாபாத்திரங்களை அவர் ஏற்றபோது வயது கூடியிருந்தது என்பதைத் தவிர அவரது நடிப்பின் வீரியம் குறையவில்லை.
8. பொம்மலாட்டம் (2008): பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘ராணா’ என்கிற திரைப்பட இயக்குநராக நடித்தார். ஒரு படைப்பாளனின் திரைக்குப் பின்னால் இருக்கும் சிக்கலான உளவியலையும், சந்தேகங்களையும், ஆளுமையையும் தன் தனித்துவமான பாணியில் வெளிப்படுத்தினார். இன்று கார்த்திக் சுப்ராஜின் ‘டோரதி’ பேசும் அதே பேசுபொருளை அன்று ‘பொம்மலாட்டம்’ பேசியது. மாற்றுப் பாலின அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை அவரது நடிப்பு அவ்வளவு நேர்த்தியாக உணர்த்திய படம் அது. இதில் இயக்குநர் கேட்டத்தைக் கொடுத்த நானா, பல காட்சிகளில் பாரதிராஜாவின் உடல்மொழியையும் நினைவுகூர வைத்தார்.
9) காலா (2018): பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஏற்ற காலா கதாபாத்திரத்துக்கு எதிரான ஹரிதேவ் அபியங்கர் என்கிற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் அதிகாரச் செருக்கையும், தூய்மைவாதம் பேசும் ஆதிக்கம் நிறைந்த அரசியலையும் சிறு புன்னகை, அலட்சியமான பார்வைகளால் அதிர வைத்து தமிழ் சினிமா கண்ட மிகச் சிறந்த வில்லன் நடிகராக தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்துபோனார்.
10. மலையாள சினிமா தவறவிட்ட படம்: நடிப்புக்காகவும் கதாபாத்திரங்களுக்காகவும் திரைமொழிகளுக்காகவும் புகழ்பெற்ற மலையாள சினிமா நானாவை தவறவிட்டுவிட்டது. தனக்கு மலையாளத் திரைப்படங்களில் நடிக்க நீண்ட நாள் ஆசை இருந்ததாகவும், ஆனால் கேரளா இயக்குநர்கள் யாரும் தன்னை அணுகவில்லை என்றும் அவரே ஒரு பேட்டியில் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு மலையாள சினிமாவில் நடித்திருந்தால் கூட அதுவும் பிடித்தமான நடிப்பாகவே அமைந்திருக்கும். அது நிகழாமலே போய்விட்டது.
வாழ்க்கையும் கலையும் ஒன்றாக்கிய கலைஞன்
திரைக்கு வெளியே நானா படேகர் ஒரு மாபெரும் மனிதநேயப் பண்பாளர். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்காக ‘நாம் ஃபவுண்டேஷன்’ (Naam Foundation) என்கிற அமைப்பைத் தொடங்கி, தன் வாழ்நாளில் ஈட்டிய பெரும் பகுதியை எளிய மக்களுக்காகச் செலவிட்டார். ராணுவத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் பிராந்திய ராணுவத்திலும் (Territorial Army) இணைந்து பணியாற்றினார்.
மூன்று தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது என உயரிய கவுரவங்களைப் பெற்றிருந்தாலும் அவர் எப்போதும் ஒரு சாமானிய நாடகக் கலைஞனின் எளிமையையுமே தன் ஆளுமையாகக் கொண்டிருந்தார்.
மராத்தி நாடக மேடையின் தீவிரத்தையும், இந்தித் திரையின் பிரம்மாண்டத்தையும், தமிழ் திரையின் உணர்ச்சிகளையும் தன் நடிப்பால் இணைத்த அந்தப் பெரு நெருப்பு, இந்தியச் சினிமா வரலாற்றுப் பக்கங்களில் என்றும் அணையாத சுடராக ஒளிர்ந்துகொண்டிருக்கும்.