பாலிவுட்

‘தனித்துவ திரை ஆளுமை’ - நானா படேகர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், திரையுலகினர் புகழஞ்சலி

ரஜினி முதல் பிரபுதேவா வரை உருக்கம்

ப்ரியா

புதுடெல்லி: இந்திய திரையுலகின் முக்கிய நடிகரான நானா படேகரின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பதிவுகள் வாயிலாக புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: “மூத்த நடிகர் நானா படேகரின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். தனது சக்திவாய்ந்த, உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் மனித உணர்வுகளின் பல்வேறு பரிமாணங்களை அவர் திரையில் வாழ்ந்து காட்டினார்.

மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் நீங்காத முத்திரையைப் பதித்த கதாபாத்திரங்களை அவர் ஏற்று நடித்தார். நலிந்த மக்களுக்கு அவர் ஆற்றிய சமூகப் பணிகள், எளிய மக்கள் மீது அவருக்கு இருந்த அக்கறையைக் காட்டுகின்றன. அவரது மறைவு இந்தியத் திரையுலகத்துக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

பிரதமர் நரேந்திர மோடி: “நானா படேகரிடம் இருந்த தீவிரத்தன்மை, தனித்துவம் மற்றும் அசைக்க முடியாத ஆளுமை ஆகியவை மிகச் சில நடிகர்களிடமே காணப்பட்ட அரிய குணங்களாகும். அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அசாதாரணமான பன்முகத் தன்மையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தி, தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரப்படும் கதாபாத்திரங்களை நமக்கு வழங்கியுள்ளார். தனது தெளிவான மற்றும் அஞ்சா நெஞ்சம் கொண்ட கருத்துக்களுக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

தான் நம்பிய கருத்துகளை வெளிப்படுத்துவதில் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. இந்தி மற்றும் மராத்தி திரையுலகுக்கு நானா படேகர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்.”

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி: “நடிகர் நானா படேகரின் மறைவுச் செய்தி இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. தனது நடிப்பினாலும், கதாபாத்திரங்களினாலும் இந்திய சினிமாவிலும், ரசிகர்களின் இதயங்களிலும் அவர் அழியாத முத்திரையைப் பதித்து சென்றுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்: “நானா படேகரின் மறைவு இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பாகும். வணிக சினிமா மற்றும் கலை சினிமா இரண்டிலும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர்கள் மிகச் சிலரே. தனது அசாத்தியமான நடிப்புத் திறன் மற்றும் தனித்துவமான ஆளுமையால் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். தலைமுறை கடந்து பல நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அவர் வழிகாட்டியாகத் திகழ்கிறார். இந்திய சினிமாவுக்கு  அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.”

கனிமொழி எம்.பி: “மூத்த நடிகர் நானா படேகர் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரது ஆற்றல்மிகு நடிப்பு, தனித்துவமான திரை ஆளுமை மற்றும் இந்தி, மாநில மொழி சினிமாக்களுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு எப்போதும் நம் நினைவில் நிலைத்து நிற்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.”

நடிகர் ரஜினிகாந்த்: “எனது அருமை நண்பர் நானாஜி இனி நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.”

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்: இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு நேர்மையும் ஆக்ரோஷமும் இருக்கும். அவரது நடிப்பு ஒருபோதும் நடிப்பு போல் தெரியாது, திரையில் உயிர்ப்புடன் இருக்கும். தலைமுறை கடந்து நினைவுகூரப்பட வேண்டிய ஒரு மாபெரும் கலைஞர் அவர்.”

நடிகர் அனுபம் கெர்: “சில மணி நேரங்களுக்கு முன்புதான் என் நண்பரும், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகருமான நானா படேகர் இனி இல்லை என்ற இதயத்தை நொறுக்கும் செய்தி எனக்குக் கிடைத்தது. காட்சியை முடித்துவிட்டு நான் உள்ளே வந்தபோது, என் இயக்குநர் கஜேந்திரா 'நானா இனி இல்லை' என்றார். அதன்பிறகு மக்களைச் சந்திப்பது, புகைப்படம் எடுப்பது, சிரிப்பது, சாப்பிடுவது... என அனைத்தையும் இந்தச் செய்தியை செரித்துக்கொண்டே செய்ய வேண்டியிருந்தது. அது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் எனது வேலையை முடிக்க வேண்டும் என்றுதான் நானா விரும்பியிருப்பார் எனத் தோன்றியது.

அவரைப் பற்றித் தெரிந்திருந்தால், ‘அட, அதுக்கென்ன இப்போ? செத்துப் போய்ட்டா என்ன பெரிய விஷயமா? எல்லாரும் சாகத்தானே போறாங்க!’ என்று அவரே இதை அலட்சியமாக சொல்லியிருப்பார். அதுதான் நானா! நேர்மையானவர், பந்தா இல்லாதவர். உன்னை ரொம்பவே மிஸ் செய்வேன் நண்பா. உன் அன்பையும், அணைப்பையும், உன் அசாத்திய நடிப்பையும் நான் இழந்து நிற்கிறேன். இனி உன்னை நினைக்கும் போதெல்லாம் உன் படங்களைப் பார்ப்பேன். இருந்தாலும் உன்னை இன்னும் ஒரே ஒரு முறை கட்டிப்பிடிக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.”

நடிகர் மனோஜ் பாஜ்பாய்: “திடுக்கிடும் செய்தி… நானா படேகர் ஜி இனி இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. சினிமாவில் ஒரு இடத்தைப்பிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு மும்பைக்கு வந்த எங்களைப் போன்ற பலருக்கு, அவருடைய பயணம்தான் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. திறமையும், தனித்துவமும், நேர்மையும் மட்டுமே சினிமாவில் உங்களுக்கான இடத்தை உருவாக்கும் என்பதை அவர் நம்ப வைத்தார். மிகச் சிறந்த நடிகரை நாம் இழந்துவிட்டோம்."

நடிகர் விஷால்: “இந்தியச் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேக்கர் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். திரையுலகின் ஒரு வைரத்தை நாம் இழந்துவிட்டோம். அவரது நடிப்பைப் பார்ப்பதற்காகவே 'பரிந்தா' படத்தை இத்தனை வருடங்களில் எண்ணற்ற முறை பார்த்திருக்கிறேன். தனக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உயிர் கொடுத்த அந்த மனிதன், நடிப்பைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு இளம் கலைஞனுக்கும் ஒரு பாடம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சார்."

நடிகர் சரத்குமார்: “இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவரான மூத்த நடிகர் நானா படேகரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்தி, மராத்தி படங்களில் தனது சிறப்பான நடிப்பு மற்றும் அசாத்திய திறமையால் லட்சக்கணக்கான சினிமா ரசிகர்களின் இதயங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.”

நடிகர் பிரபுதேவா: “லெஜண்ட் நானா படேக்கர் சாரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். அவரது நடிப்பு, அசாத்திய திறமை மற்றும் இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.”

யார் இந்த நானே படேகர்? -

மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் நெசவுத் தொழில் செய்யும் எளிய குடும்பத்தில் பிறந்த நானா படேகர், இளமைப் பருவத்திலேயே வறுமையின் கோர முகத்தைக் கண்டவர். மும்பையில் உள்ள புகழ் பெற்ற சர் ஜே.ஜே. அப்ளைடு ஆர்ட்ஸ் கல்லூரியில் வணிகவியல் வரைகலைத் துறையில் பட்டப்படிப்பை முடித்தவர், அங்கு படிக்கும் போதே நாடகத் துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மராத்தி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகக் மேடைகளில் அவர் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான நடிப்பு மற்றும் கம்பீரமான குரல் உச்சரிப்பு, பின்னாளில் அவரை இந்தி திரையுலகின் கவனத்துக்கு கொண்டு சென்றது. 

1978-ஆம் ஆண்டு வெளியான ‘கமன்’ என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய நானா படேகர், ஆரம்பத்தில் சிறிய வேடங்களிலேயே நடித்தார். இருப்பினும், 1980-களின் இறுதியில் வெளியான படங்கள் இவரது திறமையை உலகிகுக்கு காட்டின. மீரா நாயர் இயக்கத்தில் வெளியான ‘சலாம் பாம்பே’ மற்றும் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான ‘பரிந்தா’ ஆகிய படங்கள் நானாவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. பரிந்தா திரைப்படத்தில் மும்பை தாதாவாக இவர் காட்டிய அக்ரோஷமான நடிப்பு, இந்திய சினிமா வரலாற்றின் மிகச் சிறந்த வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது.

1990-களில் இந்திய சினிமா கண்ட மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார் நானா. 1994-ஆம் ஆண்டு வெளியான 'கிராந்திவீர்' திரைப்படம், நானாவை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. அதேபோல 91-ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரஹார்' படத்தை அவரே இயக்கி, நடித்திருந்தார். ராணுவ அதிகாரியாக அவர் நடித்த இந்த படத்துக்காக, இந்திய ராணுவத்தின் மராத்தா லைட் இன்ஃபன்ட்ரி பிரிவில் தீவிர பயிற்சி பெற்றார். பின்னாளில் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது, இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக எல்லையோரப் பகுதிகளில் சேவை செய்யச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

நானா படேகர் இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் மட்டுமல்லாது, தமிழிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். 2008-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தில் கறாரான இயக்குநராக தன் அசாத்தியமான நடிப்பால் கவர்ந்திருந்தார். பின்னர் 2018-ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில் தூய்மைவாதம் பேசும் ஹரிதேவ் அபயங்கர் என்ற வில்லனாக கலக்கி இருந்தார். இப்படத்தில் அவர் காட்டும் நுணுக்கமான முகபாவனைகள் வியக்க வைத்தன. 

'பரிந்தா' மற்றும் 'அக்னிசாக்‌ஷி' படங்களுக்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதுகளையும், 'கிராந்திவீர்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார். இதுதவிர, நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ள இவருக்கு, இந்திய கலைத்துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2013-ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கவுரவித்தது. மேலும் இந்திய ராணுவத்தில் அவருக்கு கௌரவ 'லெப்டினன்ட் கர்னல்' பதவியும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

எந்தவொரு சினிமா பின்புலமும் இன்றி, தனது சொந்த முயற்சியாலும், அசைக்க முடியாத உழைப்பாலும் இந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த நானா படேகரின் வாழ்வு வளரும் இளம் கலைஞர்களுக்கு என்றென்றும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

SCROLL FOR NEXT