செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் பிரபலங்களின் முகம், குரல், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தனது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளக் கோரி அவர்கள் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சனோனும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுபோன்ற விவகாரங்கள் அடிக்கடி வருவதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், தற்போதைய வழக்கின் உண்மைகளைத் தாண்டி பரந்த அளவில் இதுகுறித்த சட்டப்பூர்வச் சிக்கல்கள் ஆராயப்பட வேண்டும் என்றார்.
ஆளுமை உரிமைகளின் எல்லைகள், சட்டப் பாதுகாப்பைப் பெறக்கூடிய ஒரு நபரின் தனிப்பட்ட கூறுகள் மற்றும் இத்தகைய சர்ச்சைகள் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவின் அதிகார வரம்புக்குள் வருமா என்பதை விளக்குமாறு கீர்த்தி சனோனின் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ஆளுமை உரிமைகள் என்பது ஒரு நபரின் பெயர், குரல், முகம், உருவம், புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வரை நீட்டிக்கப்படலாம் என்று அவரது வழக்கறிஞர் ஆனந்த் வாதிட்டார். அனுமதி அல்லது ஒப்புதலின்றி ஒருவரின் அடையாள வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் உதவி கோரிய நீதிமன்றம், தொடர்புடைய நீதித்துறை முன்னுதாரணங்களையும் ஆய்வுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார். இவ்வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை அக்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.