கோப்புப் படம்

 
பாலிவுட்

‘நானா படேகர்... சுற்றி இருந்தோரின் வாழ்வையும் உயர்த்தியவர்’ - கமல்ஹாசன் புகழஞ்சலி

ப்ரியா

“தன்னை சுற்றி இருந்தவர்களின் வாழ்க்கையையும் உயர்த்தியவர் நானா படேகர்” என நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்திய திரையுலகின் முக்கிய நடிகரான நானா படேகர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு முக்கிய தலைவர்களும், சினிமா பிரபலங்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்ட குறிப்பில், ‘நானா படேகரின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

நானா படேகர் ஒரு மகத்தான கலைஞர். அதைவிட மேலாக நல்ல மனிதர். பெரும் ஆளுமையாக திகழ்ந்த அவர், தன்னைச் சுற்றி இருந்தவர்களின் வாழ்க்கையயும் மேம்படுத்தினார்.  

திரையுலகைக் கடந்து, மகாராஷ்டிரா மாநில விவசாயிகளுக்கு அவர் ஆற்றிய உதவிகளும், கார்கில் போரின்போது செய்த தன்னார்வ பணிகளும் அவரின் கடமை உணர்வு பற்றி எப்போதும் பறைசாற்றும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்: “நானா படேகரின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா நித்திய அமைதி கொள்ளட்டும்” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

காஜல் அகர்வால்: “நானா படேகரின் குடும்பத்தினர், அன்புக்குரியவர், அவரின் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது திறமை, ஆளுமை, அவர் விட்டுச் சென்ற மரபு என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தில் நானா படேகருடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்திருந்தார்.

ரவீணா டாண்டன்: “நானா படேகரின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நாம் அனைவரும் ஒருநாள் அதே பாதையில் பயணிக்க வேண்டியது இருக்கும் என்ற உண்மையை அறிந்து இருந்தாலும், இந்த இழப்பை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. அவரின் திடீர் மறைவு அதிர்ச்சியைத் தருகிறது.

நானா படேகருக்கும் எனக்கும் இடையில், பரஸ்பர மரியாதை, அன்பு, பாசம் நிறைந்த ஒரு பந்தம் உண்டு. உண்மையில் அவர் சிங்கம் போல மன உறுதி மிக்கவர். துணிச்சல், வலிமை மற்றும் தாராள மனம்கொண்டவராக திகழ்ந்தார்.

நாங்கள் இணைந்து பணியாற்றிய நாட்களின் நினைவுகளை என்றும் போற்றுவேன். ‘முஸ்தபா’ படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் என் நடிப்புக்கு தேவையான ஆழத்துக்கும் நுணுக்கத்துக்கும் அவரின் ஆளுமையும், புரிதலும் பெரிய உதவியாக இருந்தது. அதற்காக அவருக்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன்.

சிலர் வெறும் நினைவுகளை மட்டும் விட்டுச் செல்வதில்லை. அவர்களின் ஆளுமை, கனிவு, மனவலிமையின் தாக்கத்தை நம்மிடம் விட்டுச் செல்கின்றனர். நானா அப்படியான ஒருவர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என அவருடனான நினைவுகளை பகிர்ந்து நடிகை ரவீணா டாண்டன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், “எனது அருமை நண்பர் நானாஜி இனி நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT