நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணா’ திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளார். ராவணனாக யாஷும் லட்சுமணனாக ரவி துவேயும், ஹனுமானாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.
பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானும், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவ.5-ம் தேதி வெளியாகிறது.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் யாஷ் பேசும்போது, “இந்தப் படம் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்று வெளிப்படையாகப் பேசுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் படத்தைக் கொண்டு செல்லும் போது, அதன் பிரம்மாண்டமான முதலீட்டைக் குறிப்பிடுவது அவசியமானது.
சிறு பட்ஜெட் படம் என்று நினைத்து வெளிநாட்டினர் அதைக் குறைத்து மதிப்பிடாமல் இருக்கவே இந்த அளவுகோல் காட்டப்படுகிறது. இப்படத்தின் 2 பாகங்கள் மற்றும் சர்வதேச விளம்பரச் செலவுகள் அனைத்தையும் சேர்த்த மொத்தத் தொகை அது.
இந்தியர்கள் தங்களின் படங்களை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவிலேயே டீஸர் அல்லது டிரெய்லர் வெளியாகும் போது உடனடியாக மற்ற படங்களுடன் ஒப்பிட்டு, விஎஃப் எக்ஸ் குறித்தோ அல்லது நடிகர்களின் தேர்வு குறித்தோ குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டும். நம் நாட்டுப் படங்களை நாமே குறை சொல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிக்க வேண்டும்.
ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், தன் வேடத்துக்காகக் காட்டிய நேர்மை மற்றும் தீவிரமான அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறேன். அவரளவுக்குத் தன்னை ஒரு பாத்திரத்துக்காக முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட நடிகரைப் பார்த்ததில்லை” என்று யாஷ் குறிப்பிட்டார்.