பாலிவுட்

ஷாருக்கான் நடிப்பில் ‘டான் 3’ படத்தை இயக்குகிறாரா அட்லி?

செய்திப்பிரிவு

அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடித்து 1978-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தி படம் ‘டான்’. இது தமிழில் ரஜினி நடிப்பில் பில்லா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் நடித்த ‘டான்’ படம் கடந்த 2006-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது, இதை பர்ஹான் அக்தர் தயாரித்து இயக்கி இருந்தார்.

இப்படத்தின் அடுத்த பாகமாக டான் 3 உருவாக இருப்பதாகக் கடந்த சில வருடங்களாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், சரியான ஹீரோ அமையாததால் இப்படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க இருந்தார்.

‘துரந்தர்’ படம் வெற்றி பெற்றதால், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் இதில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஷாருக் கானும் பர்ஹான் அக்தரும் இது தொடர்பாகச் சந்தித்துப் பேசினர். அப்போது படத்தை அட்லி இயக்கினால்,

தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் பர்ஹான் தயாரிப்பாளராக இருக்கட்டும் என்றும் ஷாருக்கான் ஆலோசனை கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரலாம் என்று தெரிகிறது. தற்போது அல்லு அர்ஜுன் இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. அதை முடித்துவிட்டு அவர் ஷாருக் கானை இயக்குவார் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT