தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஷ்க் மே’ நவ. 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கீர்த்தி சனோன், “தனுஷ் ஓர் அற்புதமான நடிகர்” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “நான் எப்போதும் தனுஷின் திறமை மற்றும் நடிப்புக்கு ரசிகை. அவர் தனது நடிப்பில் மிகவும் வலுவான பிடிப்பை கொண்டிருக்கிறார். அவர் சில படங்களையும் இயக்கியுள்ளதால், திரையில் காட்சிகள் எப்படி வெளிப்படும் என்பது பற்றிய மிகுந்த அனுபவத்துடனும் புரிதலுடனும் இருக்கிறார். அவருடன் பணியாற்றும்போது உற்சாகமாக இருந்தேன்.
நான் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய ஒரு நடிகருடன் பணியாற்றப் போகிறேன் என்று எனக்கு தெரியும். அதுதான் நடந்தது. படத்தில் நாங்கள் சில மேஜிக்கான தருணங்களை உருவாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் நடித்து முடித்த பின் எங்களைப் பாராட்டிக் கொள்வோம். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களில் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்” என்றார்.