பாலிவுட்

பட்ஜெட் ரூ.2 கோடி, வசூல் ரூ.309 கோடி... - ‘ஹனுமன் அன்ஸ்’ சாதித்தது எப்படி?

நிலா

எந்த விளம்​பர​மும் இல்​லாமல் ரூ.2 கோடி​யில் உரு​வான ஆன்​மிகத் திரைப்​பட​மான ‘ஹனு​மன் அன்​ஸ்’, ரூ.309 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்து ஆச்​சரியப் படுத்​தி​யுள்​ளது. வட இந்​திய சித்​த​ரான நீம் கரோலி பாபா என்ற மகா​ராஜ் ஜியின் வாழ்க்​கைக் கதையை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இந்தி திரைப்​படம் ‘ஹனு​மன் அன்​ஸ்’. ஷோபி​னாவ் சத்​யா, சந்​தன் ஆனந்த் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்தை விஷால் சதுர்​வேதி இயக்​கி​யுள்​ளார்.

ராகிணி, நம்​ரதா ஜி.சிங், அனுப்​பிரியா ஏ நாகர் ஆகிய 3 பெண்​கள் தயாரித்​துள்​ளனர். இப்​படம் நீம் கரோலி பாபா​வின் வாழ்க்கை மற்​றும் போதனை​களை அடிப்​படை​யாகக் கொண்​டது. பக்​தி,அற்​புதங்​கள் மற்​றும் ஆன்​மிகத்​தின் மூலம் நம்​பிக்​கை​யைப் பெறு​வது போன்ற உணர்​வு​களை முன் வைக்​கும் படம் இது.

தன் தாயை இழந்து வாடும் லட்​சுமி நாராயணன் (நீம் கரோலி பாபா​வின் இயற்​பெயர்) என்ற சிறுவன் தன் தாயைத் தேடி வீட்டை விட்டு வெளி​யேறுகிறார். ராம​பிரானால் மட்​டுமே தன்​னை​யும் தனது தாயை​யும் மீண்​டும் இணைக்க முடி​யும் என்று நம்பி கோயில்​கள், காடு​கள், நதி​கள் மற்​றும் கிராமங்​கள் வழி​யாகப் பயணம் செய்​கிறார். ஹனு​மன் சாலிசா மூலம் ஈர்க்​கப்​பட்ட அவர், ஹனு​மன் வழி​யாக ராமரை அடைய வேண்​டும் என்று ஆன்​மிகப் பயணத்​தைத் தொடங்​கு​கிறார்.

பல ஆண்​டு​கள் நீடித்த இந்​தப் பயணத்​தில் அமை​தி, தியானம் மற்​றும் பக்​தி​யைக் கற்​றுக்​கொண்​டு, உலகப் பற்​றுகளைப் படிப்​படி​யாக விடத் தொடங்​கு​கிறார். பல ஆன்​மிகத் துறவி​களைச் சந்​திக்​கிறார். கடவுள், சேவை செய்​வ​தில்​தான் இருக்​கிறார் என்​பதை உணரும் அவர், பசி​யால் வாடு​வோருக்கு உணவளித்​து, அனை​வரை​யும் நிபந்​தனையின்றி நேசிக்​கிறார். பின்​னர் ஏழை எளிய மக்​களுக்கு ஆசீர்​வாதங்​களை வழங்கி ‘ஹனு​மன் அன்​ஸ்’ மற்​றும் நீம் கரோலி பாபா​வாக எப்​படி உரு​வெடுக்​கிறார் என்​பது படத்​தின் கதை.

இமயமலை​யின் கைஞ்சி மலை​யில் இருந்​த​வாறே இந்த பாபா உலக பிரபலங்​களை​யும் ஈர்த்​துள்​ளார். ஆப்​பிள் நிறு​வனத்​தின் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த பாபா​வின் ஆசி​யால்​தான் உயர்ந்​தேன் என்று கூறி​யிருப்​பதை அறிந்த, மும்​பையைச் சேர்ந்த 21 வயது அனுப்​பிரி​யா, இப்​படத்​தில் தானும் ஒரு தயாரிப்​பாள​ராக இணைந்​துள்​ளார்.

இங்​கிலாந்​தில் பொருளா​தா​ரம் பயின்​று​வந்த இவர், ஆப்​பிள் நிறு​வனத்​தின் பொருளா​தா​ரப் பாடத் திட்​டப்​பணி​யில் ஈடு​பட்​டிருந்த போது, நீம் கரோலி பாபா பற்றி தெரிய வந்​திருக்​கிறது. ஸ்டீவ் ஜாப்​ஸ், லாரி பிரில்​லியன்ட் போன்ற பிரபலங்​கள், பாபா​வால் ஈர்க்​கப்​பட்​ட​வர்​கள் என்​ப​தைப் படித்​ததும் அவரைப் பற்றி நண்​பர்​களிடம் கேட்டபோது, யாருக்​கும் தெரிய​வில்​லை. அவர் வாழ்க்​கையை இளைய தலை​முறைக்​குக் கொண்டு சேர்க்க, புத்​தகம் எழுதலாம் என்று நினைத்​தார். அப்​போது அவருக்கு சுவிட்​சர்​லாந்​தில் வேலை கிடைத்​தது.

விசா பெற இந்​தியா திரும்​பிய அவர், எதேச்​சை​யாக ‘ஹனு​மன் அன்​ஸ்’ படத்​தைத் தயாரித்​துக் கொண்​டிருந்த விஷால் சதுர்​வே​தி​யைச் சந்​தித்​தார். அவர் தந்த 120 பக்க திரைக்​கதையை ஒரே இரவில் படித்​தவர், இங்​கிலாந்​தில் பகு​திநேர வேலை மூல​மாக தான் சேமித்து வைத்​திருந்த பணம் அனைத்​தை​யும் இப்​படத்​துக்​காகக் கொடுத்​தார். அதை வைத்​து​தான் இப்​படம் முழுமை பெற்​றுள்​ளது.

இதுபற்றி அனுப்​பிரியா கூறும்​போது, ‘‘3 பெண்​கள் இணைந்து இப்​படத்​தைத் தயாரித்​துள்​ளோம். அவர்​களில் நான்​தான் இளை​ய​வள். படப்​பிடிப்பு முடிந்த பிறகு, அடுத்​தகட்​டப் பணி​களை முடிக்​கத் தேவை​யான பணம் இல்​லாத நிலை​யில், அந்​தப் படத்​துடன் எனக்கு வலு​வான, உணர்​வுப்​பூர்​வ​மான பிணைப்பு இருந்​த​தால், எனது முழு சேமிப்​பை​யும் முதலீடு செய்​தேன்” என்று தெரிவித்துள்​ளார்.

ரூ.2 கோடி பட்​ஜெட்​டில் உரு​வான இப்​படம் ஆக.7-ல் வெளி​யானது. வெளி​யான முதல் வாரம் கூட்​டமே இல்​லை. 2-வது வார​மும் கூட்​டம் வராத​தால் படத்​தைத் திரையரங்​கு​களில் இருந்து எடுக்க வேண்​டிய சூழல் ஏற்​பட்​டது. பிறகு வாய் மொழி​யாகப் படம் பற்​றிய செய்​தி​கள் பரவி வசூல் குவிக்க ஆரம்​பித்​தது. எந்த விளம்​பர​மும் இன்றி வெளி​யான இப்​படம் இப்​போது உலகள​வில் ரூ.309.15 கோடிக்கும் அதி​க​மாக வசூலித்து ஓடிக் கொண்​டிருக்​கிறது.

2026-ம் ஆண்​டில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்​படங்​களின் பட்​டியலில் 3-வது இடத்தை இப்​படம் பெற்​றுள்​ளது. “இந்த வெற்​றி மகா​ராஜ் ஜியின்​ அதிச​யம்​ அன்​றி வேறில்​லை” என்​று அனுப்​ரி​யா நாகர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT