மனோஜ் பாஜ்பாய். நுஷ்ரத் பரூச்சா, ஷ்ரத்தா தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்திப் படம் ‘கூஷ்கோர் பண்டட்’. ‘எ வெனஸ்ட்டே’, ‘ஸ்பெஷல் 26’, ‘எம்.எஸ்.தோனி: த அன்டோல்டு ஸ்டோரி’ உள்பட பல படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே இதை தயாரித்துள்ளார். ரிதேஷ் ஷா இயக்கியுள்ளார்.
இதில் மனோஜ் பாஜ்பாய் ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் படத்தின் தலைப்புக்குப் பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிராமணர்களைக் குறிக்கும் வார்த்தையான பண்டிட்டின் பேச்சுவழக்கான ‘பண்டட்’ உடன் ‘கூஷ்கோர்’ (ஊழல்) என்ற வார்த்தையை இணைத்து பிராமண சமூகத்தை அவதூறு செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இத்தலைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இத்திரைப்படக் குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, யார் மனதையும் மதத்தையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று நீரஜ் பாண்டே விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் சர்ச்சைக்குரிய தலைப்புக்கு எதிராக, நாடு முழுவதும் நேற்று போராட்டங்கள் நடந்தன. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் உள்ள சுபாஷ் சவுக்கில், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டே, இயக்குநர் ரித்தேஷ் ஷா, மனோஜ் பாஜ்பாய் ஆகியோரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த போராட்டத்தில் பரசுராம் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மனோஜ் பாஜ்பாய், நீரஜ் பாண்டே ஆகியோரின் முகத்தில் கரி பூசுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.