நடிகர் தர்​மேந்​திரா |சோகத்துடன் மனைவி ஹேமமாலினி

 
பாலிவுட்

மறைந்த இந்தி நடிகர் தர்மேந்திராவின் வாழ்க்கைக் குறிப்பு

செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகர் தர்​மேந்​திரா உடல் குறை​வால் நேற்று மும்​பை​யில் கால​மா​னார். அவருக்கு வயது 89.

நடிகர் தர்​மேந்​தி​ரா​வுக்கு கடந்த சில நாட்​களுக்கு முன், உடல் நலக்​குறைவு ஏற்​பட்​டது. இதனால் மும்​பை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை ஒன்​றில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவருக்​குத் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது. அவர் கால​மான​தாக அப்​போது சில சேனல்​கள் செய்தி வெளி​யிட்​டன. இதை அவர் மனைவி ஹேம​மாலினி​யும் மகள் ஈஷா தியோலும் மறுத்​திருந்​தனர்.

அவர் நலமுடன் இருப்​ப​தாக​வும் வதந்​தி​களைப் பரப்ப வேண்​டாம் என்​றும் தெரி​வித்​திருந்​தனர். தொடர்ந்து தர்​மேந்​திரா உடல்​நிலை தேறிய​தால் மருத்​து​வ​மனை​யில் இருந்து டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டார். பின்​னர் அவருக்கு வீட்​டில் சிகிச்சை தொடர்ந்து வந்​தது.

இந்​நிலை​யில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று கால​மா​னார். அவரது மறைவு திரை​யுல​கத்​தில் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதையடுத்து பிரதமர் மோடி உள்​ளிட்ட அரசி​யல் தலை​வர்​கள், நடிகர் ரஜினி​காந்த் உள்​ளிட்ட திரை பிரபலங்​கள் மற்​றும் ரசிகர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

ஷோலே படத்தில் அமிதாப் பச்சனுடன் | நடிகை சாயிரா பானுவுடன்

பிரதமர் நரேந்​திர மோடி வெளி​யிட்​டுள்ள இரங்​கலில், “தர்​மேந்​தி​ரா​வின் மறைவு இந்​திய சினி​மா​வில் ஒரு சகாப்​தத்​தின் முடிவைக் குறிக்​கிறது. தான் நடித்த ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​தி​லும் வசீகரத்​தை​யும் ஆழத்​தை​யும் கொண்டு வந்த அற்​புத​மான நடிகர்.

அவர் மாறு​பட்ட வேடங்​களில் நடித்த விதம் ஏராள​மான மக்​களைக் கவர்ந்​தது. அதே அளவு அவரது எளிமை​யும் பணி​வும் அரவணைப்​பும் போற்​றப்​பட்​டது. இந்த சோக​மான நேரத்​தில், எனது எண்​ணங்​கள், அவரது குடும்​பத்​தினர், நண்​பர்​கள் மற்​றும் ரசிகர்​கள் மீது உள்​ளது” எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

வாழ்க்​கைக் குறிப்பு: பஞ்​சாப்​பின் லூதி​யானா பகு​தி​யில் உள்ள நஸ்​ராலி கிராமத்​தில் 1935-ம் ஆண்டு பிறந்​தவர் தர்​மேந்​தி​ரா. கடந்த 1960-ம் ஆண்​டு, ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ படம் மூலம் அறி​முக​மான அவர் 1966-ம் அண்டு வெளி​யான ‘பூல் அவுர் பத்​தர்’, ‘ஆயே தின் பாஹர் கே’ ஆகிய படங்​களின் மூலம் பிரபலமடைந்தார்.

பாலிவுட்​டின் ‘ஹீ-மேன்’ என அழைக்​கப்​படும் இந்தி சினி​மா​வில் அதிக வெற்​றிப் படங்​களில் நடித்த ஹீரோ என்ற சாதனையைப் பெற்​றவர். 1973-ம் ஆண்டு 8 ஹிட் படங்​களைக் கொடுத்​தார்.

1987-ம் ஆண்டு அவர் நடித்து 9 படங்​கள் வெளி​யானது. அதில் அடுத்​தடுத்து வெளி​யான 7 படங்​கள் வெற்​றி ​பெற்​றன. இந்தி சினிமா வரலாற்​றில் இது சாதனை​யாகும். அமி​தாப்​பச்​சனும், இவரும் சேர்ந்து நடித்த `ஷோலே’ படம் மூலம் இந்​தியா முழு​வதும் புகழ் பெற்ற தர்​மேந்​தி​ரா, சுமார் 300 படங்​களுக்கு மேல் நடித்​துள்​ளார். அவர் நடித்​துள்ள இக்​கிஸ் (Ikkis) என்ற திரைப்​படம் டிச.25-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது. இது அவருடைய கடைசி படம்.

தர்​மேந்​தி​ரா, சினி​மா​வில் நுழைவதற்கு முன்​பாக, தனது 19-வது வயதில் பிர​காஷ் கவுர் என்​பவரைத் திரு​மணம் செய்து கொண்​டார். இந்த தம்​ப​திக்கு சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா தியோல், அஜிதா தியோல் ஆகிய 4 குழந்​தைகள். இதில் சன்னி தியோல், பாபி தியோல் இந்​தி​யில் நடித்து வரு​கின்​றனர். 1980-ம் ஆண்டு நடிகை ஹேமா​மாலினியை காதலித்​துத் திரு​மணம் செய்​து​கொண்​டார்.

இவர்​களுக்கு ஈஷா தியோல், அஹானா தி​யோல் ஆகிய மகள்​கள் உள்​ளனர். பாஜக சார்​பில் ராஜஸ்​தான் மாநிலம் பிகானீர் தொகு​தி​யில் 2004-ம் ஆண்டு நடந்த தேர்​தலில் போட்​டி​யிட்டு வென்​றார். மத்​திய அரசு அவருக்​கு கடந்​த 2012-ம்​ ஆண்​டு பத்​மபூஷண்​ ​விருதை வழங்​கி கவுரவித்தது.

SCROLL FOR NEXT