பாலிவுட்

10 நாட்களில் ரூ.300 கோடி: ‘த்ரிஷ்யம் 3’ வசூல் சாதனை

ப்ரியா

மும்பை: அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், இந்திய வசூலில் ரூ.300 கோடி என்ற சாதனை படைத்துள்ளது. 

கடந்த அக். 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியான இப்படம், முன்பதிவிலேயே ரூ.27 கோடியை ஈட்டியது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.66.75 கோடி நிகர வசூல் செய்து அஜய் தேவ்கனின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற திரைப்படமாக உருவெடுத்தது. வார இறுதி நாட்களான சனிக்கிழமை ரூ.53.50 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.61 கோடியும் வசூலித்து அசத்தியது.

வார நாட்களின் தொடக்கத்தில் வசூல் சற்றே சரிவைக் கண்ட போதிலும், முதல் வார முடிவில் படம் ரூ.245.50 கோடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து 2வது வார இறுதியில் மீண்டும் வசூல் வேகம் பெற்று, சனிக்கிழமை ரூ.26.50 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.23 கோடியும் ஈட்டியது. இதன் மூலம் 10 நாட்கள் முடிவில் இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.309.50 கோடியை எட்டியுள்ளது.

இந்த வசூலின் மூலம், ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் அஜய் தேவ்கனின் முந்தைய வெற்றிப் படங்களான ‘த்ரிஷ்யம் 2’ மற்றும் ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ ஆகிய படங்களின் மொத்த வசூல் சாதனைகளை முறியடித்து, அவரது வாழ்நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அபிஷேக் பதக் இயக்கத்தில், ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அஜய் தேவ்கனுடன் தபு, ஷ்ரியா சரண், ரஜத் கபூர், இஷிதா தத்தா மற்றும் சவுரப் சுக்லா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வழக்கமான வார நாட்களிலும் ரசிகர்களின் கூட்டம் குறையாமல் இருப்பதால், வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் மேலும் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT