இயக்குநர் அனுராக் காஷ்யப்
என் திரைப்படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்க்காதபோது கோபம் வருகிறது என்று இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் இயக்கிய ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபூர், அக்லி, தேவ் டி போன்ற படங்கள் அருமை என்று சொல்கிறார்கள். ஆனால் அவை வெளியான போது திரையரங்குகளில் சென்று பார்த்தவர்கள் மிகக் குறைவு. இப்போது இப்படிச் சொல்லும் போது, கோபமும் வருத்தமும் தான் வரும். நான் அவர்களிடம், ‘இந்தப் படத்தை எங்கே பார்த்தீர்கள்?’ என்று கேட்பேன். யாருமே திரையரங்குகளில் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஒரு திரைப்படத்தை மக்கள் பார்த்து, மற்றவர்களிடம் பரிந்துரைக்கும் அளவுக்கு, திரையரங்குகளில் போதுமான காட்சிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், திரையரங்கு உரிமையாளர்களே அந்த வாய் மொழி விளம்பரம் உருவாகும் வாய்ப்பை வழங்குவதில்லை. இதன் விளைவாக, இந்தப் படங்களைப் பார்க்க முடியாத பார்வையாளர்கள் ஓடிடி தளங்களில் பார்ப்பதற்கே பழகிவிடுகிறார்கள்.
இது புதிய பார்வையாளர்களை உருவாக்கும் சூழலைப் பாதிக்கிறது. மாறாக, பிரம்மாண்ட திரைப் படங்களுக்கான பார்வையாளர்களை மட்டுமே உருவாக்குகிறீர்கள். அப்படி இருந்தால், அத்தகைய திரைப் படங்களே தொடர்ந்து தயாரிக்கப்படும். அவை மிகவும் அதிக செலவில் உருவாகின்றன. மேலும், அவற்றின் வெற்றி– தோல்வி விகிதமும் மிகப் பெரிய ஆபத்தைக் கொண்டது.
‘துரந்தர்’ போன்ற வெற்றிப் படம் உருவாகும் போது, அதே நேரத்தில் 5 பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடையக் கூடும். ஆனால், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அதிக செலவானவை அல்ல. அவற்றுக்கு வாய் மொழி விளம்பரம் உருவாகும் வகையில் நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.