பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தத் தகவலை இருவரும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒரு கால் தடத்தின் படத்தை பகிர்ந்துள்ளனர் அதில் ‘வெல்கம் பேபி கேர்ள்’ என்று எழுதப்பட்டுள்ளது.
கடந்த 2018-ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதி கடந்த 2024-ம் செப்டம்பரில் தங்களின் மூத்த மகள் துவா பிறந்ததையும் இதேபோல் ஒன்றாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர்.
முன்னதாக, இந்த செப்டம்பர் 8-ம் தேதி மகள் துவா-வின் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர். அதில் ரன்வீர், ‘குழந்தை துவா மற்றும் எங்களின் மனங்கள் விரிவடைகின்றன. உங்களின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி’ என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இரண்டாவது குழந்தையின் பிறப்பை இன்று அறிவித்துள்ளனர். இவர்களுக்கு திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சனோன், ‘வாழ்த்துகள். துவாவுக்கு தங்கச்சி பாப்பா கிடைத்திருக்கிறார். என்ன ஒரு ஆசீர்வாதம்’ எனத் தெரிவித்துள்ளார்.
அட்லி – அல்லு கூட்டணியின் ‘ராக்கா’ படத்தில் நடித்து முடித்துள்ள தீபிகா படுகோன், சித்தார்த் ஆனந்தின் இயக்கத்தில் ஷாருக் கான் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘கிங்’ படத்தில் நடிக்க உள்ளார்.
ஆதித்ய தரின் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தில் நடித்திருந்த ரன்வீர். அடுத்து கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து ‘ப்ரளய்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.