இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஊழல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தி திரைப் படம் ‘கூஷ்கோர் பண்டட்’. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் தலைப்புக்குப் பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிராமணர்களைக் குறிக்கும் வார்த்தையான பண்டிட்டின் பேச்சுவழக்கான ‘பண்டட்’ உடன் ‘கூஷ்கோர்’ (ஊழல்) என்ற வார்த்தையை இணைத்து பிராமண சமூகத்தை அவதூறு செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தலைப்புக்கு எதிராக, வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
தயாரிப்பாளர் நீரஜ் பாண்டே, இயக்குநர் ரித்தேஷ் ஷா, நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. இப்படத்துக்குத் தடை விதிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடந்தது.
தற்போது எடிட்டிங்கில் இருக்கும் இப் படத்தின் தலைப்பை மாற்றத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார் என்று நெட்பிளிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.