நடிகை டாப்ஸி
மெகா பட்ஜெட்டில் உருவாகி சமீபத்தில் வெளியான ராம்சரணின் ‘பெத்தி’, யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ ஆகிய படங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகச் சித்தரிப்பது குறித்து நடிகை டாப்ஸியிடம் கேட்டபோது கூறியதாவது: இணைய உலகம் எப்போதும் நிஜ உலகில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாஸ் வகையைச் சார்ந்த பிரம்மாண்டத் திரைப்படங்கள் சமூக ஊடக உலகின் தாக்கத்துக்கு உட்படாதவை. நீங்கள் எவ்வளவுதான் விமர்சனங்களை முன்வைத்தாலும், அதே புகைப்படத்தைப் பயன்படுத்தி, ஜூம் செய்து, விசித்திரமான கோணங்களில் பல்வேறு வீடியோக்கள் மற்றும் படங்களை உருவாக்கி, அதை வைரலாக்குவதை சமூக ஊடகங்களில் காண முடியும்.
எனவே, சமூக ஊடகங்களிலும் அதற்கென குறிப்பிட்ட பார்வையாளர் கூட்டம் இருக்கிறது. ‘ரசிகர்கள் அதை விரும்புகிறார்கள். அதனால் அதைத் தர வேண்டும்; இல்லையெனில் எப்படிப் பணம் சம்பாதிப்பது?’ என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இதனால் கலை மற்றும் படைப்பாற்றல் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
கோவிட் காலத்துக்கு முன்பு உலகின் சிறந்த படைப்புகளுக்கு இணையாக வளர்ந்து கொண்டிருந்தோம். இப்போது மீண்டும் பின்தங்கி விட்டோம். அனைத்து தயாரிப்பாளர்களும் பார்வையாளர்களையே குறை கூறுவார்கள். இங்குதான் நடிகர்களாக நாங்கள் பதிலளிக்கத் தவறுகிறோம். இது தனியாக வெல்ல முடியாத போராட்டம். பார்வையாளர்கள்தான் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற உதவ வேண்டும். இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார்.