நடிகை தபுவின் பெயர், உருவம், குரல் மற்றும் பிற ஆளுமை உரிமைகளை அனுமதியின்றிப் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பிரபலங்களின் உருவத்தை அனுமதியின்றி பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக தங்களுடைய ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி, திரை பிரபலங்கள் வழக்குத் தொடுத்துத் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், நடிகை தபுவும் தனது பெயர், புகைப்படம் மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதற்குத் தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிற முறைகேடான டிஜிட்டல் உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது ஆளுமை உரிமையைப் பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி யிருந்தார்.
விசாரித்த நீதிமன்றம், தபுவைப் பற்றிய அனுமதிக்கப்படாத, ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைக் கொண்டதாகக் கூறப்படும் சுமார் 150-க்கும் மேற்பட்ட இணைய முகவரிகளை நீக்க கூகுள், மெட்டா, எக்ஸ், ரெட்டிட்நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.