நடிகையும் எம்.பியுமான கங்கனா
நடிகை கங்கனா நடித்து சூப்பர் ஹிட்டான இந்திப் படம், ‘குயின்’. இப்படத்துக்காக அவர் தேசிய விருது பெற்றிருந்தார். இப்படத்தை வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், பாண்டம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்தது.
இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே இப்படத்தைத் தயாரிக்கும் ஜியோஸ்டார் நிறுவனத்துக்கு எதிராக, மும்பை உயர் நீதிமன்றத்தில் ரூ.250 கோடி நஷ்டஈடு கோரி பாண்டம் ஸ்டூடியோஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
‘குயின்’ படத்தின் 50 சதவீத அறிவுசார் சொத்துரிமை தங்களிடம் உள்ளதாகவும் படத்தின் அடுத்த பாகம், தழுவல் அல்லது அது சார்ந்த பிற படைப்புகளை உருவாக்குவதற்கு தாங்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இது குறித்து பொது அறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை தங்கள் நிறுவனம் அனுப்பியதாகவும், சமரச பேச்சுவார்த்தைக்கு ஜியோஸ்டார், இயக்குநர் விகாஸ் பால் சம்மதிக்காததால் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பாண்டம் ஸ்டூடியோஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.