மறைந்த பின்னணி பாடகர் ஆஷா போஸ்லே பாடிய கடைசி திரை இசைப் பாடல், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே ஏப்ரல் மாதம் தனது 92-வது வயதில் காலமானார். அவர் கடைசியாக ‘ஓம் கா ஹரி’ என்ற படத்தில், ‘ஏ மேரி ஜிந்தகி து சுபி ஹை கஹானி’ என்ற பாடலை பாடி இருந்தார். இந்தப் பாடல், 2023-ம் ஆண்டு போஸ்லேவின் 90-வது வயதில் பதிவு செய்யப்பட்டது.
இந்தப் பாடல் இயக்குநர் ஹரிஸ் வியாஸ் இயக்கும் தந்தை - மகன் உறவைப் பற்றி பேசும் ‘ஓம் கா ஹரி’ படத்தில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து ஹரிஸ் வியாஸ் கூறும்போது, “ஆஷாஜியின் காலத்தால் அழியாத குரல், அவரது இசை பாரம்பரியம், பல தலைமுறைகளுக்கு இடையில் அவர் இசை ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றைச் சிறப்பிக்கும் நோக்கத்தில் அவரது பிறந்த நாள் அன்று அவரின் கடைசி பாடல் வெளியிடப்படுகிறது.
‘ஓம் கா ஹரி’ படம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இது உங்கள் அப்பாவிடம் ‘உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று சொல்வதன் முக்கியத்துவத்தை பற்றிப் பேசுகிறது. அந்த வாய்ப்பு என் வாழ்நாளில் எனக்கு கிடைக்கவே இல்லை. படத்தின் இந்த மையக்கருவை ஆஷாஜியின் குரல் தாங்கி பாடலில் வெளிப்படுத்தி இருப்பது, ஒரு கலைஞனாக என் வாழ்வில் மிகவும் முக்கியமான மறக்க முடியாத தருணமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1933-ல் மகாராஷ்டிராவில் உள்ள சங்க்லியில் ஆஷா போஸ்லே பிறந்தார். சிறு வயதிலேயே தனது இசைப் பயணத்தை தொடங்கினார். பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இதில் இசையின் பல்வேறு ஜானர்களும் அடங்கும். 1950-களில் தேசம் பரவலாக அறியப்பட்ட நட்சத்திர பாடகராக உயர்ந்தார்.
தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ஆகியோரது இசையில் அவர் பாடல்களைப் பாடியுள்ளார். இசையில் அவரது பங்களிப்பை போற்றும் வகையில் தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம விபூஷண் விருது ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன. இவர் ஏப்ரல் 12-ம் தேதி தனது 92-வது வயதில் காலமானார்.