தமிழில் கொடி, தள்ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்டவுன் உள்பட பல படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இப்போது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை ஷான் இயக்குகிறார்.
பாலிவுட்டில் ரஸ்டம், டாய்லெட்: ஏக் பிரேம் கதா, பேட் மேன் ஆகிய படங்களைத் தயாரித்த பிரேர்னா அரோரா, ஷிவின்நரங், கிரண் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தியில் உருவாகும் இப்படம் மூலம் அனுபமா பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. பிரேர்னா அரோரா கூறும்போது, “அனுபமா பரமேஸ்வரனுடன் இணைவதைச் சிறப்பானதாக உணர்கிறேன். பல மொழிகளில் நடித்து வரும் அவர் திறமையை பாராட்டியுள்ளேன். இந்தப்படம் ஒரு நடிகையாக அவருக்குச் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.