‘த்ரிஷ்யம்: தி கன்களூஷன்’ படத்தின் கதையை நாங்கள் முற்றிலும் மாற்றிவிட்டதால் இந்தப் படத்தை மோகன்லால் பார்க்க வேண்டும் என்று தான் விரும்பியதாக அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அஜய் தேவ்கன் அக்டோபர் 2 அன்று வெளியாக இருக்கும் தனது ‘த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படம் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “உண்மையில் நான் மோகன்லாலை அழைத்துப் பேசினேன். இந்த முறை நாங்கள் கதையை முற்றிலும் மாற்றி இருக்கிறோம். அதனால் அவர் பார்த்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன்.
அவர் (மோகன்லால்) படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அவர் விடுமுறையில் சென்றிருக்கிறார். அவருடன் பேசியது இனிமையாக இருந்தது. விரைவில் அவர் அங்கு படத்தை பார்ப்பார் என நம்புகிறேன்.
இந்தி ‘த்ரிஷ்யம்’ பாகங்களில் இதுதான் இறுதி. ‘த்ரிஷ்யம்’ கதையை எழுதுவது கடினம் என நான் உணர்கிறேன். இதை நாங்கள் சிறப்பாக முடிக்க விரும்பினோம். அதன்படி, திரைக்கதையும் படமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை இத்துடன் முடித்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நான் படம் பார்த்தேன். 2-ம் பாகத்தை விட, இந்த பாகம் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
த்ரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகத்தில் நாங்கள் கதையை கொஞ்சம் மாற்றி இருந்தோம். மலையாள படத்தில் அக்ஷய் கண்ணா கதாபாத்திரம் கிடையாது. இப்போது, இந்த மூன்றாவது பாகத்தின் திரைக்கதை முற்றிலும் புதியது. இரண்டும் வேறு வேறு படங்கள்.
உங்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்க, இயக்குநர் அபிஷேக் பதாக்கும், எழுத்தாளர் குழுவும் இந்த திரைக்கதைக்காக இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.
திரைக்கதையும், படம் உருவாகி வந்திருக்கும் விதமும் அற்புதமாக உள்ளது. எனவே, இது இறுதி பாகமாக இருக்கட்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம்” என்று அஜய் தேவ்கன் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் அஜய் தேவ்கனுடன் ஸ்ரேயா சரண், தபு, ஜெய்தீப் அஹ்லாவத், இஷிதா தத்தா, சவுரப் சுக்லா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாளப் படத்தை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட ‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகம் 2015-ம் வெளியானது. அதனை மறைந்த நிஷிகாந்த் காம்த் இயக்கி இருந்தார். இரண்டாவது பாகம், அபிஷேக் பதாக் இயக்கத்தில் 2022-ல் வெளியானது. மூன்றாவது பாகமான ‘த்ரிஷ்யம்: தி கன்களூஷன்’ அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.