தமன்னா
நடிகை தமன்னா நடித்துள்ள ‘தி வான்: ஃபோர்ஸ் ஆஃப் ஃபாரஸ்ட்’ என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த செப்.25-ல் வெளியான இப்படத்துக்காக ஆழ்கடல் டைவிங் பயிற்சிகளை மேற்கொண்டதாக தமன்னா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நீருக்கடியில் நடக்கும் காட்சியில் நடிக்க முதலில் மிகவும் பயந்தேன். எனக்கு நீச்சல் தெரியாது. காட்சிக்காக, கிட்டத்தட்ட நீரில் மூழ்கும் நிலையில் இருக்க வேண்டியிருந்தது. இதனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் நீச்சல் மற்றும் ஆழ்கடல் டைவிங் பயிற்சிகளை மேற்கொண்டேன்.
இதற்கு ஹீரோ சித்தார்த்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்; அவர் ஆழ்கடல் டைவர் என்பதால் எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
நடிப்பு என்பது நான் கொண்ட காதலால் செய்வது; அது எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த நடிப்புப் பயணத்தில் உடலளவிலும், மனதளவிலும், உணர்ச்சி ரீதியாகவும் பல சவால்களும் போராட்டங்களும் இருக்கலாம்; ஆனால், அது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியைத் தருவதால் மட்டுமே நடிக்கிறேன். ஒருவேளை அதனால்தான் என்னவோ, என் கடின உழைப்பைக் குறித்து ஒருபோதும் மனக்கசப்பு அடைந்ததில்லை;
எனக்குச் சேர வேண்டிய அங்கீகாரம் கிடைத்ததா, இல்லையா என்று எப்போதும் கேள்வி எழுப்பியதும் இல்லை” என்றார்.