நடிகை டாப்ஸி, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் இப்போது அதிகம் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘அஸ்ஸி’ என்ற படத்தை அனுபவ் சின்ஹா இயக்கி உள்ளார்.
இதில், கனி ஸ்குருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ஊழல் நிறைந்த அமைப்பு மற்றும் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் வழக்கறிஞராக டாப்ஸி நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற விவகாரத்தைக் கொண்ட படம் இது.
இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. பிப்.20-ல் வெளியாக இருக்கும் இப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு டாப்ஸி வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தப் படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று தெரிவித்துள்ள டாப்ஸி, “இந்தி சினிமா உண்மைக்கு நெருக்கமான கதைகளை உருவாக்குவதில்லை என்ற சாக்குப் போக்குக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்.
இயக்குநர்கள், படக்குழுவினர் அதுபோன்ற படங்களைக் கொண்டு வரும் போது, தியேட்டருக்குச் சென்று அதைப் பார்ப்பது உங்கள் பொறுப்பு. உலக சினிமாவுடன் போட்டியிட வேண்டும் என்றால், முதலில் நம் படங்களை ஆதரிக்க வேண்டும். படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறாததற்குத் திரைப்படத் துறையை மட்டும் குற்றம் சொல்ல முடியாது; ரசிகர்களின் ஆதரவு குறைபாடும் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.